துயரம் • May 17, 2021
சீர் புகழோய் செகம் வந்து கவலை தீர்ப்பாய்
மறைந்த தமிழக அறிஞர் அமரர் ரெங்கராஜன் அவர்களிற்கான அஞ்சலி
முகம் நிறைந்த புன்சிரிப்பு எங்கே போச்சு ?
முத்தான உன் பேச்சு எங்கே போச்சு ?
அகம் நிறைந்த அன்பூற்று எங்கே போச்சு ?
அனைவரையும் அணைத்த கரம் எங்கே போச்சு ?
செகம் முழுக்க அழுகிறதே செம்மல் நீ தான்
சென்றவழி தேட வைத்து எங்கே போனாய் ?
சுகம் நாடிச் சுந்தர! உன் வரவை வேண்டி
சுவர்க்கத்து வாசிகள்தான் அழைத்தார் போலும்
கம்பவாரிதி என்னும் கடவுள் அன்பால்
காற்தூசாம் என்னிடத்தும் அன்பைக் கொண்ட
உம்பெரிய உறவிழந்து உழலும் நெஞ்சை
உரம் தந்து தேற்ற இனி வழிதான் ஏது ?
கம்பனது மேடையெலாம் யொலித்த உந்தன்
கருத்துயர்ந்த பேச்சொலிகள் காதில் நிற்கும்
நம்புமிறைத்திருவடியில் நலமே வைகி
நல்லமைதி கொண்டிருப்பீர் மாற்றமேது
தாய்வீடாய் நம் கம்பன் கழகம் தன்னைத்
தான் கருதிப் பேணி நின்ற தகையோய் இன்று
வாய் மூடி மௌனித்தாய் தவித்துப் போனோம்
வருதுயரம் தீர்த்தருள! வரம்தான் ஏது
நோய்க்கிருமி உன் உயிரைப் பறிக்கும் என்று
நொடியேனும் நாம் எண்ணிப் பார்த்தோம் இல்லை
சேய் உள்ளம் உணராத தாய்தான் உண்டோ ?
சீர் புகழோய் செகம் வந்து கவலை தீர்ப்பாய்