துயரம் • Sep 27, 2020
விரைவில் வா நீ
உலகத்துக் காதெல்லாம் உவகைத் தேனை
ஊற்றிய உன் குரல் இன்று எங்கே போச்சு
விலக்கத்தான் முடியாத விந்தைப் பாக்கள்
விதம் விதமாய்ப் படைத்தவனே வீழ்ச்சியேது
கலைக்கென்று பிறந்தவனே காலம் வெல்லா
காட்டாறே காற்றோடு காற்றாய் ஆனாய்
நிலைக்கும் உன் பேர் என்றும் நிலைத்த நிந்தன்
நீள்கடலாம் பா உண்டோர் நிலைப்பர் தானே
காயங்கள் பல துடைத்த உந்தன் பாடல்
கனிவுடனே இனிமேலும் மருந்தாய் ஆகும்
மாயங்கள் பல கோடி கற்றாய் போலும்
மான்பான உன் பாக்கள் விந்தை செய்யும்
தாயெங்கள் துயர் துடைத்த சிகிச்சைப் பாட்டே
தரணியுனை இழந்து இன்று துடிக்கலாமோ ?
நீயெங்கள் சொத்தையா நின்னை இன்றி
நீண்டயுகம் போலாகும் நிலைத்த ஓர் நாள்
எங்களது கழகத்தில் ஏற்றம் சேர
எளியவனாய் நீ வந்து விருதை ஏற்றாய்
சிங்கமென மீண்டுபோய் சிறக்கும் வண்ணம்
சீரான பாப் பணிகள் பலதும் செய்தாய்
மங்கலமே உருவான மான்பே உந்தன்
மகிழ்ந்த மனப்பொலிவின்று எங்கே போச்சு
தங்க நிகர் உன் பாடல் தாலாட்டாகும்
தயங்காது நீ உறங்கு தரணிப் பாயில்
காத்தோடு கலந்துவரும் உந்தன் பாட்டால்
கனிந்த உனைக் கண்டுவப்போம் காலந்தோறும்
பூத்தமலர் தோற்றோடப் பொலிந்த உந்தன்
புன்னகையை பூவுலகம் எங்கே காணும் ???
நேத்தோடு முடியவில்லை உந்தன் வாழ்க்கை
நெடியவனே யுகம்தோறும் நிலைப்பாய் வாழ்க!
வேத்தோடும் விழிகளுடன் வரவை நோக்கி
விரதமுடன் காத்திருப்போம் விரைவில் வா நீ