கோபம் • Oct 03, 2020
வீணர்க்கெங்கே புரியுமடா ??
உண்ணா நோண்பால் உயிர் நீத்த
உண்மைப் புலியே உடன்பிறப்பே
என் பா உனக்கோர் பொருட்டன்று
ஏந்தல் உனக்கேன் இப்பரிசி ??
வெண்பா விருத்தம் குறும்பாக்கள்
வெற்றாய் வரைந்த என் கைகள்
அன்பால் அகிம்சைப் போர் தொடுத்த
அண்ணா உனக்காய்த் துடிக்கிறதே
ஐம்புலன் வென்ற தவசியென
ஐயா நீ உன் இளமை சுகம்
தெம்புடன் நீக்கி இருந்தனையே
தேசத்தவர்க்காய்த் துடித்தனையே
அம்மா உந்தன் அணுவெல்லாம்
ஆராத்தாகம் கொண்டெழுந்து
எம்மாம் பெரிய தீப்பொறியை
எல்லா இடமும் பரப்பியது
உடலின் அணுக்கள் ஒவ்வொன்றும்
உதிரக் குளத்தில் நீராடும்
விடலைப் பருவம் உனை வாட்ட
விடுதலைதான் என் வேட்கை என
கடலைக் குடிக்கும் பசியோடு
கடைசிவரைக்கும் துடித்தனையே
படலைதோறும் பந்தலிட்டுப்
பார்த்தா உனக்காய்ப் பசி கிடந்தோம்
உன்னைத் துதிக்கத் தடை போட்டார்
உணர்வறியாத உலக்கையர்கள்
மண்ணை மதிக்க மறவா உன்
மகிமை மடையர் யார் அறிவார் ?
விண்ணை வீழ்த்த நினைத்திடலாம்
விதியென்றதனை ஏற்றிடலாம்
நின்னை மறக்கச் செய்வதெல்லாம்
நிஜமாய் நடக்கும் காரியமா ?????
மண்ணை மிதித்த கயவர்களை
மாறாக் கோபக் கனல் கொண்டு
உண்ணா நோண்பால் உருக்குலைத்த
உரிமைக்குரலே உயர் அறமே
புண்ணாய்ப் போக உடல் பொசுக்கி
புகன்றாய் புல்லர்க்ககிம்சை வேர்
விண்ணாய் உயர்ந்த உன் வீரம்
வீணர்க்கெங்கே புரியுமடா ??