இன்பம் • May 28, 2021
விண்ணவர்கோன் என இன்று விழவு கண்டான்
மன்னவனாம் திருமுருகன் மகிழ்ந்து நூறு
மணியாண்டு வாழட்டும் மண்ணும் வாழும்
எண்ணிய நல் தமிழ் வாழும் சமயம் வாழும்
எழில் கொஞ்ச இனம் வாழும் வறுமை சாகும்
புண்ணியனாம் இவன் வாழ்வு பொலியுந் தோறும்
புவனங்கள் பற்பலவும் பொலிவு காணும்
விண்ணவர்கோன் என இன்று விழவு காணும்
விறல் வேந்தன் திருவடியைத் தொழுதேன் வாழி
தாயிழந்த குஞ்சுகள் போல் தவித்து வாடும்
தளர்பருவ முதியர்கட்குத் தாயாய் ஆனாய்
சேயிழந்து செகம் பிரியும் முதியோர்க்கெல்லாம்
சேயாகிச் செய்கடன்கள் எல்லாம் செய்தாய்
வாயிழந்தோர் வருதுயரம் நீக்கத்தானே
வடிவெடுத்த வல்ல இறை என்ன வந்தாய்
நீயிழந்த உயர்வெல்லாம் நிறைந்து சேரும்
நித்தியமாய் உன் புகழும் நிலத்தில் ஓங்கும்
வற்றாத அன்பு நிறை உள்ளம் வாழ்க!
வருதுயரம் போக்கும் உயர் கரங்கள் வாழ்க!
உற்றாரை உலகோரை உறவாய்க் கொண்டு
உறுதுணைகள் செய ஓடும் கழல்கள் வாழ்க!
கற்றாரைக் களித்தாடும் கனிந்த உந்தன்
கருணைமிகு கண்கள் ஒளி விஞ்சி வாழ்க!
சற்றேனும் ஓயாமல் சகத்துக்காற்றும்
சால்புமிகு உன் மக்கள் சேவை வாழ்க!
கம்ப கவிச் சுவைபோலக் காலந்தோறும்
கண்ணியனே உன் புகழும் நிலைக்கும் வாழ்க!
நம்பும் இறைத்திருவருளால் நலங்கள் சேரும்
நாயகனே நன்றொழிரப் பொலிந்து வாழ்க!
உம்முடனே ஒருசேர வாழும் பேற்றால்
உய்ந்தோம் நாம் உளம் மகிழ்ந்து சொல்லுகின்றேன்
எம்முடைய வாழ்நாளும் ஏற்று வாழும்
ஏந்தல் நீ வாழ்ந்தாலே பூமி வாழும்!