பவர் சேர்க்க மாட்டாயோ ?

அமிழ்தப் பதமெடுத்து  

அந்தமிலாப் பாட்டெழுதித்

தமிழில் எனை மறக்கத்

தாராயோர் வரமென்றிங்கு

உமிழ் நீரும் விழுங்காமல்

உறுதவமே புரிந்துழலும்  

குமிழிப் பயல் இவனை

குறித்திரங்க மாட்டாயோ ?

 

தவமாய்த் தவமிருந்து

தமிழ்க் கவிதை வடம் பிடித்து

அவ மானம் தான் களைய  

ஆயிரமாய்த் தேர் இழுத்து

நவ பாதை நான் வகுத்தால்

நன்றென நீ துணை  இருந்து

பவர் சேர்க்க மாட்டாயோ ?

பதில் சொல்லு நீ எனக்கு

 

ஆயிரம்தான் முயன்றாலும்

ஆவி உயிர்த்தலைந்தாலும்

பாயிரத்தைத் தாண்டாமல்

பாட்டோலை வெற்றிடமாய்

நீயிருக்கத் தமிழ் எனக்கு

நேசமில்லை என்றிருந்தால்

தாயிழந்த மகன் நிலைதான்

தமிழுக்கு எய்திடுமே  

 

வில்லாய் விறைத்தாலும்

விழிபிதுங்கித் திகைத்தாலும்

பல்லோடு பல் கடித்துப்

பதைபதைத்து முயன்றாலும்

சொல்லோடு சொல் சேராச்

சுகமிழந்த புணர்ச்சியிலே

கல்லாக நீ சமைந்தால்

கவி எங்கே கைகூடும் ?

 

சொல்லரசி உன் கழலே தஞ்சம் என்றேன்

சோதிமணி வார்த்தைகளை எனக்கு ஈவாய்

எல்லையறு பரம்பொருள் போல் என்றும் உள்ள

எழில் மிகுந்த கவிதைகளை எனக்குள் ஆக்கி

வல்லமை நெய் வாசனைகள் வார்த்துச் சேர்த்து

வளம் பெருக்கிச் சுவை திரட்டி வனப்புங் கூட்டி

பல்லுலகின் கவிச்சுவைதேர் பக்தர்க்கெல்லாம்

பசி போக்கப் பெரு விருந்தைப் படைக்கச் செய்வாய்

 

Share :

Tag :
Comments :