கோபம் • Oct 10, 2020
வீழ்வேன் என நினைத்தீரோ
உலகங்கள் ஒரு சேர எதிர்த்தாற் கூட
உள்ளிருக்கும் உண்மை ஒளி துணையாய் நின்றால்
விலகுங்கள் என்றவரை விரட்டித் தள்ளி
வீறுடனே வெற்றி பெற்று உயர்வேன் உண்மை
கலகங்கள் ஒரு நூறு செய்து என்னைக்
கால்வார நினைப்பவரைக் கருதி அஞ்சேன்
பழகுங்கள் அன்புடனே பாதம் சேர்வேன்
பகை கொண்டால் படையெனிலும் எதிர்த்தே நிற்பேன்
வழிகாட்டல் வாழ்த்துரைகள் வெளியே செய்து
வஞ்சகமாய் நெஞ்சகத்தில் தூற்றும் நெஞ்சும்
குழி தோண்டிக் குறிவைத்துக் குதறக் காக்கும்
குறுமதியார் கூட்டத்தின் உறவும் வேண்டேன்
பழிவேண்டேன் பகைவளர்க்கேன் பாசஞ்செய்வேன்
பாய்ந்துவரில் பயந்தொழியேன் பாவம் பாரேன்
விழிபிதுங்க விரட்டுவதே வழியாய்க் கொள்வேன்
விறகுதலைத் தடியர்கட்கு விதி விலக்காவேன்
வீழ்வேன் என்று எனை வருத்த விட்டு வையேன்
வீணர்களின் வார்த்தைகளால் வருத்தம் கொள்ளேன்
ஆழ்வோரின் புகழ்பாடேன் அறத்தை மிஞ்சேன்
ஆணவத்தால் அன்புடையோர் மனத்தை வையேன்
வாழ்வதுவும் தாழ்வதுவும் வல்லோன் நெஞ்சால்
வாதிடுவோர் அறியாமை அதை என் சொல்ல !
நீள்வது என் நெடுவழியாம் நெஞ்சம் சோரேன்
நீசர்களின் பழிப்புரையைச் சிரிப்பால் வெல்வேன்