சமூகம் • Oct 11, 2020
உறவு
உள்ளத்தன்பால் உவப்புற்று
உயிர்வரை அன்பின் அணுதொட்டு
வெள்ளத்தணை போல் விளிம்பிட்டு
வேர்வரை உணர்வாம் நெய்விட்டு
பள்ளந்தேடும் நதிநீர் போல்
பாசப்புனல்தான் பாய்ந்தோடும்
கள்ளம் இல்லாக் கனிவூற்றில்
களித்துப்பிறப்பது நல் உறவாம்
தன்னில் பிறரை காண்பதுவும்
தனைப்போல் பிறரைக்கருதுவதும்
அன்பில் ஆழ்ந்து கரைவதுவும்
அகங்கள் இணையப் பழகுவதும்
துன்பில் துணையாய்த் துடிப்பதுவும்
துடைக்க விரைந்து குதிப்பதுவம்
என்பில் புழுக்கும் இரங்குவதும்
என்றோர் வாழ்வு இருந்ததுவே !
பொங்கல் வருடம் பண்டிகை போல்
பொலிந்து வீட்டில் உறவிருக்கும்
தங்கும் இன்பம் தனி நிறைவாய்
தலை நின்றுயர்வாய் மகிழ்வூட்டும்
திங்கள் தோறும் திருவிழவால்
திகட்டும் இனிமை கூடிவரும்
எங்கள் வாழ்வில் உறவின்பம்
இனிக்க இனிக்க இருந்ததுவே
மாற்றான் பையன் தவறிழைத்தால்
மாண்டுபோ என்றிருக்காமல்
காற்றாய் விரைந்து கண்டித்தோம்
கனிவாய் அவனைத் தண்டித்தோம்
ஊற்றாய் உள்ளே அன்பிருக்க
உலகம் முழுதும் உறவானோம்
வேற்றாய் நினைத்தால் வேர் ஏது
வேறப்புத்தானே பரிசாகும்
ஊரில் உழைத்தோம் உழுதுண்டோம்
உறவோடிருந்து உயிர்ப்புண்டோம்
நேரில் சிரித்தோம் நெஞ்சமெல்லாம்
நேயத்தாலே நிறைந்திருந்தோம்
வேரில் தொடங்கி விழுதுவரை
வாஞ்சை தவள வாழ்ந்திருந்தோம்
போரில் மடிந்தபோதிலும் நாம்
பொலிந்த உறவைப் பெற்றிருந்தோம்
அண்டை வீட்டுச் சாப்பாடு
அயல் வீடெங்கும் உலாப்போகும்
உண்டபின்னர் உரையாட
உரிமை கூட்டம் உறவாகும்
சண்டை இட்டோம் சரி செய்தோம்
சாலை தோறும் வம்பழந்தோம்
கண்டம் விட்டுக் கண்டம் போய்
காசிற்காகப் பிரிந்தனமே!
கணவன் மனைவி ஒரு பிள்ளை
கடைசி வரைக்கும் பணத்தேடல்
தினமும் வாழ்க்கைத் திண்டாட்டம்
தீராச் சோலி ஓய்வில்லை
இனமும் சனமும் அருகேதான்
இணக்கம் இல்லை உறவில்லை
பணமும் போனும் பந்தாவும்
பஷனாய் இன்று ஆள் எதற்கு ?
வட்சப் வைபர் பேஸ்புக்கில்
வளமாய் நூறு குரூப் சேர்த்து
குட்மோணிங் ரூ குட்நைட்டாய்
குறுஞ்செய்தியதே வாழ்வானோம்
புட்டிப்பாலும் பொதிசோறும்
பீட்சா பேர்கர் பிறைட்றைஸ்சும்
அட்டட்டைமில் அகம் சேரும்
ஆள் உறவு இங்கே நமக்கேது
அடுக்கும் சுற்றம் அயல் என்று
அன்பால் பொலிந்த எம் வாழ்வு
கெடுக்கும் செல்போன் சுவருக்குள்
கேவலமாகச் சுருங்கியதே
தொடுக்கும் உறவுச் சுகம் வி;ட்டு
தொலையப் போகும் எம்மினத்தை
தடுத்துக் காக்க ஆண்டவனே
தரணிக்கோர் வழி காட்டாயோ ?
ஊராய் கூடித்தேர் இழுத்த
உறவுக்கயிறு தனித்தனியே
வேறாய்ப்பிரிந்து கிடக்கிறது
வேற்றான் விதைத்த பண்பாட்டால்
வேராய் நிலைத்து விழுதூன்றி
வெயிற்கு நிழலாய்க் கிளை பரப்பி
சீராய்ச் சிலிர்த்து உறவாவோம்
சினேகக் கரத்தால் உலகாள்வோம்