காதல் • Oct 08, 2020
வாசல் திறந்து வந்த நிலா
உள்ளக்கதவை உடைத்தெறிந்து
உட்கார்ந்திட்ட என் பெண்ணிலவே
அள்ளியணைத்திடத் தோணுதடி
அயல் வந்து என் விரகம் தீரனடி
துள்ளியெழுந்திட்ட யௌவனத்தை நீ
தொலைவிருந்தாற்றுதல் எப்படியோ ?
கள்ளி உன் சிற்றிடை பற்றுதற்கு என்
கைவிரல் கொள் இன்பம் யார் அறிவார் ?
தேனினை வென்ற குரலொலியாள் மிகு
தேவதைத் தோற்றப் பொலிவுடையாள்
மானினைப் போன்ற மருள் விழியாள் மட
மாது என் தேகத்துப் போர்க் கொடியாள்
வானிடை தோன்றி மறைபவள் போல் வந்து
வார்த்தையில் ஒளிதந்து மறைபவள் காண்
கானில் இடர்ப்பட என்னை விட்டு நனி
கை கொட்டிச் சிரிக்கிறாள் என்ன செய்வேன்
முத்தங்கள் ஆயிரம் மூச்சிட வைத்ததில்
மூண்டெழு காதலைக் கொட்டிடவே
எத்தணித்தே தினம் ஏங்கித் தவிக்கிறேன்
ஏதென்று கேட்டு என் அருகு நண்ணி
சித்தம் நிறைந்து நீ சீர் நடம் ஆடடி
சீதனம் என்ன நீ உன்னைக் கொடு
மெத்தப் பெரிதடி மேனி கொதிக்குது
மேல் வந்து வீழடி! மெய் சிலிர்ப்போம்!
நெற்றி வளைவும் உன் நேர் வகிடுச்சியும்
நேர் எழுந்தார்த்திடும் வில்லழகும்
பற்றி இழுத்திடும் பங்கயக் கண்களும்
பாலமை மாறிடாப் பல் நிரையும்
பெற்றி பெரும் புகழ் பேசிட முன்வரும்
பேதமை சேர்ந்த உன் பேச்சொலியும்
உற்றுடன் ஏகியே உன்னுடன் வாழ்வதை
ஊறு இன்றிப் பேணடி என்னவளே!