இன்பம் • Oct 07, 2020
புத்தாண்டில் புத்துலகம் !
உலகமெலாம் உயிரனைத்தும் நிறைவு கொள்ள
ஒப்பற்ற சார்வரியாம் வருடம் தன்னில்
நிலமுழுதும் மனித இனம் துயரம் நீங்கி
நிட்டூரக் “கோரோனா” அரக்கன் தன்னை
வளமுறவே அறம் வளர்த்து வாஞ்சை பொங்கும்
வற்றாத அன்புநெறி தன்னால் வீழ்த்தி
பொலபொலன இருள் நீக்கி விடியச் செய்வோம்
போற்றித்தான் இறைவனடி புகழ்ந்து நின்றே
இயற்கையதன் ஒழுங்கதனை மீறானின்று
எல்லோரும் வாழ்வதற்காம் வழிகள் செய்வோம்
மயக்கமுற விஞ்ஞான வலிமை தன்னை
மனுக்குலத்தார் மட்டும்தான் பெறலாம் என்னும்
நயப்பதிலாக் கொள்கைதனை நலியச் செய்வோம்
நாணிலத்தில் உயிரனைத்தும் நம்மால் ஓங்கி
உயிர்ப்புறவே வழிசமைத்து ஒன்றாய் வாழ்வோம்
ஒப்பற்ற இறையவனின் அடிகள் பற்றி
அற்புதமாம் மனுக்குலத்தின் அறிவு தன்னை
அழிவுக்காய் வீணாக்கி அதர்மம் செய்து
நற்பதங்கள் இழந்திடவே உயிர்கள் வாட்டி
நலம் சிதைக்கும் இழிவுதனை நலியச் செய்வோம்
பற்றுடனே உயிரனைத்தும் உறவாய் எண்ணி
பல்லுயிரும் வாழ்ந்திடவே வழிகள் செய்வோம்
கற்பெனவே இவையனைத்தும் போற்றி நின்று
கடவுளரை மண்ணதனில் இறங்கச் செய்வோம்
ஆயுதங்கள் பல செய்து ஆட்டம் போட்டு
அழிவதனில் எமைவிட்டார் எவரே என்று
பேயெனவே நின்ற பெரும் நாட்டார் எல்லாம்
பேதலித்து நிற்கின்றார் கிருமிக்கஞ்சி
சாயுதலும் நிமிருதலும் கடவுட் செய்கை
சரித்திரத்தைச் சற்றேனும் பார்தாற் தோன்றும்
நோயதனைச் செய்தார்கள் நோயே கொள்வார்
நுண்மையுடன் நலம் செய்து நலமே கொள்வோம்
கம்பனவன் உலகனைத்தும் உயர்ந்து வாழக்
காவியத்தில் வழிகள் பல சொல்லித்தந்தான்
நம்புகிற அனைவரையும் காத்து நின்ற
நாயகனாம் இராமனுமே கானம் சென்று
அம்புவியில் அனைவரையும் உறவாய்க் கொண்டான்
அற்புதமாய்ப் பேதங்கள் அறுத்து நின்றான்
தெம்புடனே அவன் வழியைப் போற்றி நாமும்
தேற்றமுறப் புத்துலகைச் சமைத்து நிற்போம