இன்பம் • Jan 28, 2021
எமதன்னைத் தமிழ் கண்ட அரிய சொத்து
என்றும் இளம் கன்னி என ஏற்றங் காணும்
எமதன்னைத் தமிழ் கண்ட அரிய சொத்து
மன்றதிர மடைதிறந்து தமிழைப் பேசி
மாண்பான புகழாரம் கொண்ட செம்மல்
வென்றெவரும் எதிர் நிற்க முடியா வேந்தன்
வேதமெனத் தமிழ் பயின்று உயர்ந்த மாண்பன்
கொண்டல் நிறத்தழகனிவன் கொற்றம் மிக்கான்
கொண்ட பெரும் விருதறிந்து உவகை கொண்டோம்
பாப்பையா என்றாலே வதனம் பூக்கும்
பாமரர்க்கும் இவர் பேச்சுப் பசியைத் தீர்க்கும்
சீப்பிட்ட சிகைபோல சிறக்கும் வார்த்தை
சீராட்டி எமை வளர்த்தீர் தமிழால் நாளும்
வேப்பினையும் தேனாக்கும் வெற்றித் தேவே!
வெல் விருதாம் 'பத்மஸ்ரீ" விரும்பிச் சேர
காப்பையா எம்தமக்குக் கடவுளானாய்!
காதாரத் தமிழ்த் தேனை ஊற்றுவாயே!
ஈழத்துக் கம்பனது கழகம் தன்னை
ஈன்றவளின் வீடென்று இயம்பும் உங்கள்
ஆழத்து அன்பதனில் நெகிழ்ந்த நாங்கள்
அன்புரிமை பற்றி உமை வணங்குகின்றோம்
காலத்தால் அழியாத கல்வி தேடி
கற்றதனால் மயங்காத தெளிவு தேடி
வேழத்தின் மிடுக்கோடு பொலியும் உங்கள்
வெல்கழலை வணங்குகிறோம் வாழ்த்தும் எம்மை
கம்ப வா ருதி என்னும் கடவுளாலே
கருத்துயர்ந்த உம் அன்பு வாய்க்கப் பெற்றோம்
தெம்பு தரு தமிழ்த் தொடர்பு தொடர்ந்து நீண்டு
தேவரென எமை மிளிரச் செய்ய வேண்டும்
கம்பனுடைத் திரு நாளில் கலந்தோர் போலே
காதறிந்த செய்தியினால் மகிழ்வு கொண்டோம்
எம் தலைகள் அத்தனையும் தடவிப்பார்த்தோம்
எமக்கே தான் விருதென்ற உணர்வினாலே!