நீடுபுகழ் சேர் கரிய நெடுமாலோ இன்றோடு
பீடுநடை கொண்டபடி பொன்விழவு –சூடுகிறான்
சித்தம் களிகூர சிவசங்கர்ப் பெரியோற்கு
புத்தமுதப் பாட்டுப் புனை
கழகத் தலைமையினை காத்திரமாய் முன்னெடுத்து
அழகிற்கழகூட்டும் உத்தமனே – பழகியதாம்
உறவுத் தேர் இழுக்க உரிமை வடம் பிடிக்கும்
நிறைவுக் கரம்கொண்டு நில்
சிவதேவி அக்காவும் மதுவந்தி சயந்தவியும்
உவகையொடு உடனிருக்க எந்நாளும் - தவமாக
தமிழ் என்னும் யாகத்தின் தணலாக நீ இருந்து
அமிழ்தொத்த கவிநெய் அளி
அன்பகலா மனைவி அழகொழிரும் மக்கள்
இன்முகத்தோடாசி தரும் பெற்றோர் - பின்வந்த
இளவல்கள் புடை சூழ இங்கிதமாய் எந்நாளும்
தளுவும் தமிழ்க்கவிதை தா
அரும்பும் நரையுடனே அரைச்சதத்தில் அடிவைத்தும்
விரும்பும் ‘ டை’ அதனை ஏற்காது – துரும்பாக
மூப்பழகை முறுவலுடன் முந்தி நின்று வரவேற்று
ஆப்புவைத்த உனக்குநிகர் ஆர்
பொன்விழவு தாண்டிப் பொலிந்த பெரும் நூற்றாண்டில்
உன்தனக்கு வாழ்த்திசைக்க வேண்டும் - சின்னவனின்
சிரம் தாழ்ந்த வாழ்த்தினை சிந்தை கொண்டேற்க
பரமனை வேண்டினேன் பணிந்து
Comments