நித்தமும் என்நெஞ்சில் நிலை!

blog image

(வெண்பா இலக்கணத்திற்குஅமையாதது)

 

நெக்குருகி நேர்ந்தும்மை நெடுநாளாய்ப் பணியுமிந்த

மக்கனுக்காய் மனமிரங்கக் கூடாதோ – பக்குவமாய்

அறிவுக்கு அறிவாகி அகத்தினிலே அமர்ந்தென்றும்

நெறி செய்யவேண்டும் நினை!                              1

 

பழம் பாகு பால் எதையும் படைத்தறியா எனக்கிரங்கி

இளம் யானைக் கன்றனைய முகத்தோனே - வளம் ஈவாய்

செந்தமிழால் உலகாண்டு சேமமுற நீ எனக்கு

அந்தமிலா ஆற்றல் அளி!                                  2

 

வாழப் பொருள் தந்து வளம் செழிக்கத் தமிழ் தந்து

ஏழைச் சிறியேனை ஏற்றம் செய்  - வேழமுக

வித்தகனே! உன் பாதம் வேண்டித் தொழுதிட்டேன்

நித்தமும் என்நெஞ்சில் நிலை!                             3

 

நம்பிக்கும் ஒளவைக்கும் நல்லபெரும் கபிலர்க்கும்

தெம்புதரும் தமிழ்த்தானம் செய்தவனே –கும்பிட்டேன்

நீங்காமல் நீ என்றும் நெஞ்சினிக்கும்  தமிழ் தந்து

பாங்காக அருள்செய்யப் பார்!                                4

 

வேண்டுவோர் உள்ளத்தில் வெளிப்பட்டுத் துணைசெய்யும்

ஆண்டவனே அருள் நிறைந்த ஆனைமுகா!  - நீண்டதோர்

தும்பிக்கை உண்டென்னும் துணிவுடனே பணிந்தேத்தி

நம்பிக்கை கொள்கின்றேன் நான்                                   5

 

இல்லாமை கூடி இருப்பெல்லாம் தொலைந்து போய்ப்;

பொல்லாப்பு நேருகிற புவனியிலே - வல்லோனே

பச்சிளம் பிள்ளைக்கே பால் மா இங்கில்லையிவ்

அச்சத்தை அகற்றுவார் ஆர்                                  6

 

உள்ளாடை கூட இனி உள்ளகடை கிடையாது

சொல்லாடி என்ன பயன் சொல்லிடுவாய் - நில்லாது

பட்டினத்தார் பாதைதான் சரி என்று தேறலாம்

கட்டியதும் பழக்கமில்லைக் காண்!                              7

 

கோவணம் தான் கதி என்ற கோதாரி நிலைஆச்சு

பூவனத்தில் நீர் இருந்து பூரித்தீர் - தாவுமயில்

ஏறிப் பறந்துபோய் எழில் ஆண்டியாய் நின்றான்

கூறியதாம் கொள்கை குறி                                      8

 

பள்ளிக்குப் போய் அறியாப் பாலரினம் வீட்டிருந்து

சல்லித் தனமாகத் சரிகிறதே–கொள்ளிவைத்த

ஒண்லைனாம் வகுப்பினிலே உயிர் விட்ட பிஞ்சுகளை

தண்ணளி கொண்டணைக்கவரம் தா!                           9                  

 

மரணங்கள் மலிகிறது மன்றாட்டம் தொடர்கிறது

அரனே நீ அமைதியுறல் கூடுமோ  - வரம் தந்து

வாழ வழி காட்டு வளம் பெறட்டும் மனிதகுலம்

ஊழகல உடனிருந்து உழை                                     10

 

 

Share :
Tag :
Comments