மறைந்த தமிழகக் கவிஞர் பிறைசூடன் அவர்களுக்கான அஞ்சலி
துள்ளு தமிழால் கவிபாடித்
துயரம் களைந்த தூயவனே
அள்ளியணைத்த தமிழ் இன்று
அநாதை ஆக நிக்கிறது
கள்ளம் இல்லா மனத்தழகா!
காலன் செவிக்கும் இனித்ததுவோ ?
தௌ;ளு தமிழின் கவிதைத்தேன்
தேடித்தான் உனை அழைத்தானோ ?
உண்மை ஒளியை உளத்தேற்று
உருக்கும் கவிதை நீசமைத்தாய்
வெண்மை உடையும் வெண்ணீறும்
வெற்றி கொள்ள நீநடந்தாய்
தண்மை நிறைந்த தமிழ்போலே
தகைமை கொள்ள நீஇருந்தாய்
திண்மை மிகுந்த உன்கவிதை
தேசம் முழுக்க, நீஎங்கே ?
அறையைத் தாண்டாக் கவிஞர்களே
அரற்றித் தங்கள் புகழ்பாட
நிறைந்த பாடல் உலகாண்டும்
நீகொள் அடக்கம் யார்க்குவரும்
மறைந்து கிடக்கும் கவிப்பொருளை
மணியார் தமிழால் வெளிக்கொணர்ந்தாய்
உறைந்து போனாய் என்செய்வோம்
உலகம் முழுக்க அழுகிறதே!
கம்பன் கழகக் கவியரங்கைக்
காது இனிக்க நீநடத்தி
எம்மாம் புகழை எமக்களித்தாய்
ஏனோ விரைவில் நீபிரிந்தாய்
செம்மாந்திருந்த கவி ஏறே
செழுந் தமிழாலே பாத்தொடுத்து
அம்மா! என்று அழுகின்றேன்
ஆற்றுப் படுத்த வாராயோ ?
Comments