வள்ளலுனைப் போல் ஒருவர் மண்ணில் இல்லை

blog image

தெய்வமாகிவிட்ட கம்பன் கழகப் பிதாமகர், என்றென்றும் எங்கள் ஆன்ம வணக்கத்திற்குரிய,

சா. கணேசன் ஐயாவின் பிறந்த நாளை முன்னிட்டு எழுதிய கவிதை

 

கம்பனுக்கோர் பெரு நிலையம் மண்ணில் கண்ட  

 கம்பீரப் பெருமனித உன்னை எண்ணின்

தெம்புவரும் நெஞ்சினிலே கம்பன் மாண்பை

 தேசமெலாம் பரப்புகின்ற வாஞ்சை விஞ்சும்

அம்புவிக்கோர் ஆதவனாய்  ஆண்மை ஏறாய்

 அடிவைத்த கம்பனடிப் பொடியே போற்றி

நம்புமிறை அருள் தொடர நாங்கள் எல்லாம்

 நன்றென உன் பாதை பற்றிப் பணிகள் செய்வோம்

 

பாட்டரசன் கம்பனது புகழைக் காத்தால்

 பைந்தமிழைக் காத்த கடன் தீரும் என்று

நாட்டரசன் கோட்டையிலே தவங்கள் செய்தாய்

 நாள் முழுதும் தமிழுக்காம் அறங்கள் செய்தாய்

வாட்டமின்றித்தமிழ் வாழ வரங்கள் ஈந்த

 வள்ளலுனைப் போல் ஒருவர் மண்ணில் இல்லை

காட்டுவழி ஏற்று உனைத் தொடர்ந்து நாங்கள்

காலமெலாம் பூசிப்போம் கம்பன் கோவை

 

நீயணிந்த பாதுகையைத் தலையில் சூடி

 நித்தமும் உன் பணி தொடர்ந்து வழிகள் காட்டும்

தூயபிரான் கம்ப வாரிதி பின் நின்று  

 துரும்பிவனும் உன் பணியைத் தொடர்வான் வாழி!

நாயகனே நாணிலத்துக் கழகத்தாயே  

 நனி முயன்று தமிழ்ப் பெருமை ரட்சித்தாயே!

தாயென நீ தலை தடவி வளர்க்கக் கம்பன்

  தமிழுலகில் விழுதெறிந்து விரிந்தான் வாழி!  

 

Share :
Tag :
Comments