மன்றாடித் தொழ வேண்டும் உந்தன் பாதம்

உணர்விழந்து உயிரிழந்து ஊட்டம் நீங்கி

உன்னதத்தை ஒருசேரத் தொலைத்த மண்ணில்

புனர் ஜென்மம் தமிழுக்குத் தந்தோன் என்னப்

புது வழியில் பொய்மைகளைப் போக்கி நின்றாய்

பணிவறியாத் திமிர் நடைகள் பாருக்கீந்து

பாரதரைச் சிறை விடுத்தாய் பாரின் ஏறே

துணிவோடு எதிர் எவன்தான் ? தோன்றக்கூடும்

தூயவனே துயர்க்கடலைத் தூய்மை செய்தாய்

 

பாலருக்கும் பாங்குடனே பாதை சொன்னாய்

பழகு தமிழ்ப் பதமெடுத்துப் பாடல் செய்தாய்

நூலெடுத்த புலவருக்கும் நுணுகிக் கற்க

நுவன்ற பொருட் கவிதைகளோ கோடி கோடி

காலையிளம் பருதியதன் கதிரைப் போலே

கணக்கிழந்த கவிதைகளால் இருளைப் போக்கி

மாலை புகழ் அத்தனையும் தமிழுக்காக்கி

மதிப்பீந்த பெருங் கவிஞ மகிழ்வாய் வாழி!

 

நெருப்பாக நீயிருந்து நிலத்தோர் யார்க்கும்  

நித்திய நல் வாழ்வீய நீசங் காய்ந்தாய்

தருக்குற்ற திமிர் வெறியர் தலைகள் வீழத்

தக்க பதில் தந்து வைத்துத் தவமே செய்தாய்

விருப்போடு உன் பதத்தைப் போற்றோமானால்

வீணில் எம் வாழ்வழியும் விந்தை என்னே !

கருத்தோடு ஏற்றுகிறோம் கவிதைக் கோவே

காலமெலாம் நீ வாழ்வாய் கவிதை சாட்சி

 

தேசபக்தி தெய்வ பக்தி தெவிட்டா நல்ல  

தேனார்ந்த தேவையெலாம் பாட்டில் வைத்தாய்

பாசமிக்க மழலைமொழிப் பிள்ளைச் செல்வம்  

பாழ்வறுமைச் சுமை போக்கும் உண்மை சொன்னாய்

பேசரிய பெண்ணடிமை கழைந்து பெண்ணைப்

பேறெனவே கொண்ட உனைத் தலையில் கொண்டு

காசிகியில் கவியின்பம் மேவுங்காறும்  

கவிமாந்தர் உன் கவியை உவப்பர் வாழி!

 

அந்நியரை எதிர்த்த விதம் மறக்கலாமோ ?

அற்பரென மிதித்ததிலே தவறெதாமோ ?

முந்து புகழ் கவியமுதே முழுதும் கற்ற  

முதுபுலவ! நீதானே எங்கள் சொத்து

நந்து கவிப் படையல் இட்டு நயங்கள் கூட்டி  

நானிலத்தில் நாமுயர நாளும் தேய்ந்தாய்

விந்தையடா உனது வழி வியப்பே தாண்டா  

விதியதற்கும் விதியானாய் வேராய் வாழ்வாய்  

 

புதுமைகட்கு வழி வகுத்தாய் பூக்கும் வண்ணம்

புத்துலகைப் பாட்டினிலே புகன்றே வைத்தாய்

பதுமை போல் மங்கையரும் படைகள் ஆகும்  

பாங்குரைத்தாய் பான்மதிக்கும் போவோம் என்றாய்

மதுநிறைந்த மலர்ச்சோலை மண்ணின் மேன்மை  

மகிழ்வூட்டும் இயற்கை சுகம் மாந்தச் செய்து

கதியானாய் கவியுலகின் கடவுள் ஆனாய்

கழல்பற்றிப் போற்றுகிறோம் கருணை செய்வாய்

 

கணினியுகப் புதுமைகட்கும் காவல் நீயே

கடைசிவரை கவியுலகின் மூச்சும் நீயே

பணியுனக்குச் செய்வதன்றி பாரின் ஏறே

பாவி எமக்கேது வழி ?? பகருவாயே

பிணியகலக் கவி புனைந்த உன்னை வெல்லப்

பிறப்பெடுத்த மனிதரில்லை பேணிப் போற்றி

மணிமுடிகள் பலவணிந்து மாதந்தோறும்

மன்றாடித் தொழ வேண்டும் உந்தன் பாதம்

 

 

Share :

Tag :
Comments :