கற்பனை • Oct 17, 2020
சிவன் விடு தூது
உள்ளத்தவிப்பை உணர்ந்து கொண்டு
உதவத் துடிக்கும் உத்தமனே
வெள்ளம் அணைத்த விரிசடையோய்
வேறற எங்கும் நிறைந்தவனே
தெள்ளத்தெளிவாய்த் தேடி அவள்
தெருவைக் கண்டு வீடடைந்து
மெள்ள உறங்கும் அவளருகே
மேல்க்கருத்ததனை சொல்லிடுவாய்
ஊரடங்கு என்ற கவலை இல்லை
உயிர் பயம் எதுவும் உனக்கு இல்லை
பாரடங்கிடுதே பயங் கொண்டு
பற்ருறு கிருமி கொரோனாவுன்
வேரதைக்கூட நெருங்கிடுமா ?
வேறென்ன அச்சம் உனக்குண்டு
பேரவள் முகவரி போன் நம்பர்
பேஸ்புக் அட்றஸ் நான் தருவேன்
காலைப் பொழுதில் அவள் விழியாள்
கடும்பகல் ஆகும் கண் விழிக்க
வாலைப் பருவக் கிளிபோல்வாள்
வாஞ்சை முகத்தை நீ பார்த்து
மாலைப் பொழுதில் மனந்திறந்தென்
மரண வேதனை சொல்லிடுவாய்
நூலை இழந்த பட்டம் போல் நான்
நொடிந்த கதை நீ சொல்லாயோ ?
கயிலை மலையை நீ விட்டு
காற்றாய் அவளின் வீடடைந்து
குயிலை பயிற்றும் குரலொலியாள்
குங்கும நிறத்து உதட்டுடையாள்
வெயிலை வென்ற ஒளியவளை
வெறித்து ரசித்து இருக்காமல்
மயிலைப் பழிக்கும் மணியழகாள்
மனக்குறிப்பறிந்து நீ சொல்லாய்
பக்தர் பல பேர் பாத்திருப்பர்
பாதி வழியில் உனை மறிப்பர்
சித்தம் கலைந்து திகைப்புற்று
சிலைபோல் நின்று அவர்க்கருளி
மொத்தப் பணியும் கெடுக்காமல்
மௌனம் காத்து மீண்டருள்வாய்
நித்தம் நிலைத்த நட்பதனால் நான்
நீண்ட பணியை ஒப்படைத்தேன்
சிவசிவ என்றே சித்தம் உறச்
சிரம்மேல் வைத்து உனை உயர்த்தி
தவமாய் தவித்து தாம் உருகி
தம்மடியார்கள் உனைப் புகழ்வர்
அவமாய் அழைத்து அருகிருத்தி
அட்வைஸ் பலதும் உனக்குணர்த்தி
நவமாய்த் துணையை நான் வேண்ட
நல்லடியார்தான் பொறுப்பாரோ ?
காதல் கவிதை கடிதமுறை
கனிவாய் உதவல் தூதுரைத்தல்
மோதல் விலக்கல் முதலியதாய்
முன்னின்றுழைத்தீர் பல படியாய்
சாதல் வேண்டி நான் தகித்தால்
தருமப் பிழைதான் உமை வாட்டும்
போதல் செய்வீர் அருள் வடிவீர் நான்
பிழைத்தல் உமக்கு வேண்டுமெனின்