இன்பம் • Oct 13, 2020
கவிதைக் கர்ப்பம்
குளியலறை புணர்ச்சிக் குதூகலத்தில்
என் புத்திக் கருப்பைக்குள்
எண்ண விந்தொன்று
எப்படியோ புகுந்து கருக்கட்டும்.
எண்ணத் தலைவன் என்னைப் புணர்வது
எப்போதும் குளியலறையில் தான்.
உடலுலர்த்தி, உடைமாற்றி எழுதத் தொடங்குமுன்
உதித்த எண்ணக்கரு,
எப்படியோ சிதைந்து சீரழியும்.
கருக் கலைந்த கவலையில்
ஏமாற்றங்காட்டும் ஏக்கப் பெருமூச்சு.
மீண்டும் வார்த்தை தேடித் தோற்று,
கவிக்கர்ப்பம் கலைந்த கவலையில்,
வேதனை மிகுந்து பேனா தலை குனிந்திருக்க,
வெள்ளைத் தாளோ மலடியின் வயிறாய்…
வானம் பார்த்து வகிடு சொறிந்து
வாசல் வீதி ஓடி நடந்து
கம்பன், ஒளவை, பாரதி என்று
கவிதைக் கடவுளர் தம்மை நேர்ந்து
இன்னும் ஒரு கருவுக்காய் ஏங்கிக் கிடக்க
மீண்டும் ஓர் கரு மெல்லக்கூடும்.
மாதங்களாக மணித்துளி கரைய,
மணிக்கோர் வரியாய் அங்கம் முளைத்து
என்கவி மெல்ல இறங்கிடும் தாளில்
கவிதைக் கருவை கருத்தில் சுமந்து
உயிர் படும் துன்பம் ஒன்றா இரண்டா?
கவிதைக் கர்ப்பம் காத்து இறக்கும்
எந்தன் கவி வலி எவரே அறிவார்?