கட்டுரைக் குடில் • Apr 13, 2023
ஆதலினால் காதல் செய்வீர்!
உ
உண்மையில் இப்பொழுதுள்ள என் மன நிலையைச் சொல்லவேண்டும் என்றால் எனக்கு மகன்
கிடைப்பதற்கான சமயம் வைத்தியசாலையில் ஒப்பிறேசன் தியேட்டர் வாசலில் பரபரப்பின் உச்சக்
கட்டத்தில் நகத்தைக் கடித்தபடி அங்குமிங்குமாய் அலைந்து கொண்டு நின்ற மனநிலை தான், என்
பள்ளிக்கால அனுபவத்தை எழுத்தில் தா என்று கேட்ட போது எனக்கு உண்டானது. நான் ஒன்றும் சரித்திரம்
எழுதவல்ல சாதனையாளன் கிடையாது.
உள்ளதைச் சொல்ல வேண்டும் என்றால் எனக்கு அப்போதும் படிப்புச் சரியாய் வராது தொட்டில்
பழக்கம் என்பது இதுதான் போலும்.
ஒரு சராசரி மாணவனுக்குரிய பயம், பதட்டம், ஆர்வம், கனவு என எல்லாம் சேர்ந்த மனநிலையோடு,
என் அப்பாவின் பெரிய கரியல் பூட்டிய சைக்கிளில் அமர்ந்தபடி இந்து அன்னையின் மடியை
சென்றடைகிறேன். அந்தப் பள்ளிக்கூடத்தில் சேரும் போது அனுமதிக்கட்டணம் அறுநூறு ரூபா
கட்டியாகவேண்டும். இப்போது அது சின்னக்காசு. ஆனால் அப்போது எங்களுக்கு அது ஆகாய கங்கை.
அறுநூறிற்கு எங்கே போவது அந்நிலையில்?
தரம் ஆறில் சேருவதற்கு வேண்டிய வழியைக் கண்டு கொண்டது ஒரு சுவையான சம்பவம். இந்துக்
கல்லூரியின் அப்போதைய அதிபர் திருமிகு சந்திரசேகரா அவர்களின் வீட்டிற்கு நான், எனது தந்தையார்,
மாமனார் சகிதம் செல்கிறேன். மதியச் சாப்பாட்டிற்குப் பின்பான ஓய்வை முடித்து எழுந்த அதிபர் அன்போடு
எம்மை வரவேற்கிறார். குடும்ப நிலைகளைக் கேட்டறிந்துவிட்டு என்னிடம் ஓர் நிபந்தனை முன் வைக்கிறார்.
அனுமதியை இலவசமாக்குவதாய் இருந்தால், ஓர் பேச்சுப் பேசிக்காட்ட வேண்டும். கூச்சம், தயக்கம்,
புதுமுகம் என ஏதேதோ காரணங்கள் என்னை வருத்த, தயங்கித் தயங்கி ஒருவாறு பாராட்டத்தக்கதாக ஓர்
பேச்சைப்பேசி அனுமதியோடும் நன்றியுணர்ச்சியோடும் விடை பெற்றுக்கொள்கிறேன். இப்படித்தான்
ஆரம்பித்தது எனக்கும் இந்து அன்னைக்குமான உறவு.
மெல்ல அணைத்து மடியில் இருத்தி மேனி தடவி அன்பு சொரிந்து அவள் என்னில் காட்டிய
அக்கறைக்கு அளவில்லை. ஆனால் அவள் அன்பை அப்போது நான் உணர்ந்து கொள்ளவுமில்லை. சரிவரப்
பயன்படுத்திக் கொள்ளவுமில்லை. ‘பெத்தமனம் பித்து பிள்ளைமனம் கல்லு” என்பார்களே அந்தப் பழமொழி
இவ்விடத்தில் நன்றாய்ப் பொருந்தும்.
தரம் ஆறில் எம் வகுப்பாசிரியராக வாய்க்கப் பெற்றவர் இன்று அமரராகிவிட்ட எங்கள் ஆன்ம
வணக்கத்திற்குரிய ஆசிரிய திலகம் திருமிகு விநாயகமூர்த்தி ஐயா அவர்கள். தமிழிலே சான்றோர்கள் என்று
ஓர் வரிசை வைப்பார்கள் அந்த வரிசைக்கு முற்றிலும் பொருத்தமுடைய பெருமனிதர் அவர். எம்மைத் தன்
சொந்தப் பிள்ளைகளாய்த்தான் கருதினார். சேவையில் மிக நேர்த்தி கொண்டவர். அவர் பாடசாலைக்கு
வரவில்லை என்றால், அது பாடசாலைக்கே மிகப் பெரிய புதினம், மடிப்புக் குலையாத வெள்ளை வேட்டி,
வெள்ளைச்சட்டை, ஆடம்பரம் இல்லாத தோற்செருப்பு, கையிலே ஒரு சில புத்தகங்கள், நேரம் தவறாமை
என தனக்கென சில அடையாளங்களை எப்போதும் பேணிக் கொள்வார். அன்பானவர், அமைதியானவர்,
நாற்பத்து நான்கு குழந்தைகளை நல்லபடி பேணும் பொறுப்பைச் சுமந்தவர். தரம் 6ஏ வகுப்பு ‘ஏ’
வகுப்பென்றால் மிகக் கெட்டிக்கார வகுப்பென்று நீங்கள் நினைத்துக் கொண்டிருப்பீர்கள். ஆனால்
அவ்வெண்ணம் தவறானது. அப்போது எங்களுக்கு அடிமட்டத் தொண்டர்கள் என்று பெயர். எல்லாம் மக்குக்
கூட்டங்கள் அத்தனையையும் ஒருவாறு ஒப்பேற்றி வெற்றிகண்டவர்.
காலமாற்றம் உண்டு பண்ணிவிடும் கோலமாற்றத்தை என்னென்று சொல்வது.
இன்று பாடசாலையில் ஆசிரியர்கள் மாணவர்களைக் கண்டிக்கக் கூடாதாம். ஒரு மாணவன்
நினைத்தால் தான் நினைத்தபடி எந்த ஆசிரியனையும் பழி தீர்த்து விடலாம். மாணவனின் அட்டூழியங்கள்
ஆயிரமாய் அரங்கேறினாலும் வாய்மூடி மௌனித்து ஆசிரியன் இருந்து கொள்ளவேண்டும். தட்டிக் கேட்டால்
தகராறு இந்த இடத்தில், நீலாவணன் என்ற கவிஞனின் ‘பாவம் வாத்தியார்’ என்ற கவிதை தான் நினைவுக்கு
வருகிறது. எங்கள் காலத்தின் கதை வேறு எங்களைப் பாடசாலையில் சேர்க்கும் போது நன்றாக அடித்துப்
படிப்பியுங்கள் என்றுதான் ஒப்படைத்தார்கள்.
அப்போது அந்த வார்த்தைகள் எங்களுக்கு வேதனை தந்ததென்னமோ உண்மைதான். ஆனால்
இப்போது அது நல்லதென்றே படுகிறது. எங்கள் ஆசான் விநாயகமூர்த்தி ஐயா அன்பானவர் என்று
சொன்னேனே, எந்த அளவிற்கு அவர் அன்பானவரோ அந்த அளவிற்கு அவர் கண்டிப்பானவர். தன்னுடைய
கைக் கடிகாரத்தைக் கழட்டி மேசைமீது வைத்துவிட்டு, தடியை எடுத்தாரென்றால் எங்கள் கதி அதோ
கதிதான். சப்தநாடியும் அடங்கி நடுங்கிப் போவோம். அடித்த இடம் வீங்கி, வெடித்து, தளும்பாகி, இரத்தம்
பாய்ந்து, கண்டிப்போய் என எத்தனையோ அவஸ்தைகள் பட்டிருக்கிறோம். ஆனால் அவை எல்லாம் எங்கள்
தவறுகளுக்கான தண்டனைகள் தான், என்ற எண்ணம் தான் எம் மனதில் எப்போதும் இருந்து வந்தது.
அடிவேண்டி விட்டு வீடு போகும் போது இதையெல்லாம் தாண்டிய வேறோர் பயம் மனதை வாட்டும் வீட்டிற்கு
தெரிந்தால் அது வேறு துன்பம் அங்கும் அடி வேண்ட வேண்டி வருமே என்று நடந்ததை மறைக்கப்படும்
பாடோ பெரும்பாடு. ஆனால் இன்று பெற்றோர்களின் மனநிலைகூட பெரும்பாலும் மாறிப் போய்விட்டது.
ஆசிரியர்கள் கண்டிப்பதை இன்றைய பெற்றோர்கள் விரும்புவதில்லை. மேலைத்தேய கல்விக்
கொள்கைகளை அப்படியே உள்வாங்கிக் கொண்டு திண்டாடும் பரிதாபத்தை என்சொல்ல. பிள்ளைகளோடு
சேர்ந்து கொண்டு சட்டம் பேசுவோரே இன்று அதிகம் பேர். சரி சரி நான் சொல்ல வந்த விடயத்திற்கு
வருகிறேன். நான் சமூக அவலங்களை எண்ணி விட்டால் நாட்கணக்காக இப்படிப் புலம்பிக் கொண்டே
இருப்பேன். திருந்த வேண்டியோர் திருந்தாமல் புலம்புவதால் பயன் என்ன?
இன்று எங்கள் பாடசாலையின் பிரதி அதிபராக இருக்கின்ற மரியாதைக்குரிய திரு.
பாலசண்முகநாதன் சேர் அவர்கள் அன்று எமக்கு கணிதம் கற்பித்தார். இப்படி நாமும் எழுதமாட்டோமா?
என்று தன் அழகிய எழுத்தால் எம்மை ஏங்க வைத்தவர் அவர். தன் ஆசிரியப் பணியை தொடங்கியது முதல்
நிறைவு செய்யும் வரை எங்கள் கல்லூரிக்கென்றே அயராது உழைத்த விஞ்ஞான ஆசான் திருமிகு.
இராஜ்செல்வம் அவர்கள் எங்கள் எல்லோருடையதும் விருப்பிற்குரியவர். விளையாட்டுப் போட்டிகளின் போது
யாதொரு விளையாட்டிலும் ஈடுபாடில்லாத என்போன்றவர்களையும் தன் வசிகரமான அறிவிப்புக் குரலால்
கவர்ந்திழுத்து நிற்கும் சமத்தர் அவர். ஓய்வுபெற்ற பிரதி அதிபர் திரு.லோகநாதன் சேர் மென்மையாய்ப்
பேசுவது எப்படி என்று வழிகாட்டி வைத்தவர்.
ஆங்கிலம் கற்பித்த பத்மா ரீச்சர் பொறுமையின் பொருளை புரியவைத்தவர். வரலாறு கற்பித்த
பத்மதேவா மிஸ் வரலாற்றோடு சேர்த்து எங்களுக்கு இன்னொன்றையும் கற்றுத் தந்தார். மற்றவர்களிடம்
கோபப்படுவது எப்படி வேறொன்றுமில்லை கோபித்த மறுகணம் மறந்து விடுவார். அதுமட்டுமல்ல ஒருவர் மீது
எந்த விடயத்திற்காக கோபப்படுகிறோமோ அந்த விடயத்தில் மட்டும் கோபம் இருக்கவேண்டும் அவருக்குப்
பிறகு எமக்கு வரலாறு கற்பித்தவர் அண்மையில் ஓய்வு பெற்ற பிரதியதிபர் செல்வராணி மிஸ் கல்வி
ஒழுக்கத்தோடு இருக்கவேண்டும் என்பதில் உறுதியானவர்.
எங்களையெல்லாம் அச்சத்தின் உச்சம் தொட வைத்த விஞ்ஞான வாத்தியார் ராஜலிங்கம் அவர்கள்
நாட்டுச் சூழலும் எம் இனத்திற்கே உண்டான வெளிநாட்டு மோகமும் ஒன்றிணைந்து அந்த அற்புத வரத்தை
எம்மிடம் இருந்து பிரித்துக் கொண்டது. தமிழின் மீது தனிக்காதல் கொள்ள வைத்தவர் திருமிகு
நாகேஸ்வரன் சேர் அவர்கள் தமிழிலும் கவிதையிலும் எனக்குத் தணியாத தாகத்தை உண்டாக்கித்தந்து
இன்று ஒரு துளி தமிழ் தெரிந்த நிலைக்கு உயர்த்தி வைத்த காரணர் அவர். விநாயகமூர்த்தி சேர் ஓய்வுபெற்ற
பின் எங்கள் வகுப்பு ஆசிரியராய் வாய்க்கப்பெற்ற அமைதியின் திருவுரு கணித ஆசான் நித்தியானந்தம்
அவர்கள் மிக அன்பானவர். இவர்களையெல்லாம் இன்று வரை எங்கள் தெய்வங்களாகவே நாங்கள் எண்ணி
வருகிறோம். ‘ஓகோ அப்ப நீங்கள் தப்பே செய்யாத தங்கக் கம்பிகள் என்றா சொல்கிறீர்கள்?’ என்று நீங்கள்
கேட்பது புரிகிறது. நான் அப்படிச் செல்லவில்லை. எங்கள் வயதிற்கேற்ற தவறுகளைச் செய்யத்தான்
செய்தோம். நாங்கள் ஒன்றும் ஞானிகளாய் வாழ்ந்தோம் என்று சொல்லவில்லை. குழப்படி செய்யாத மாணவன்
என்று ஒருவன் இருக்கமுடியுமா? ரசிக்கத்தக்க மாணவனின் குறும்புத் தனங்களை அங்கீகரிக்காத
ஆசிரியர்களே இருக்கமாட்டார்கள்.
குறும்புத்தனங்கள் அசிங்கத்திற்குரிய அடாவடித்தனங்களாக மாறும் போது அது எல்லோரையும்
வேதனைக்குள்ளாக்குகிறது. இன்றைய மாணவனின் தவறுகள் ஆசிரியர்களுக்கு எதிரானது என்று
ஆகிவிட்டது. மாணவனின் முதல் எதிரி ஆசிரியன் அடுத்தபடி தாய், தந்தையர். தாய், தந்தையர்கள் அதை
இதைக் கொடுத்துத் தப்பித்துக் கொள்கிறார்கள். ஆசிரியன் கண்டிக்க விழைந்து கசப்பிற்குள்ளாகிறான்.
இந்நிலை மாற வேண்டும் பள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்ட காலத்தில் பள்ளியின் அருமை எமக்குப்
புரியவில்லை. இந்த வார்த்தைகள் எல்லோரும் சொல்கிற வார்த்தைகள் தான். ஆனால் வாஸ்தவமானவை.
பள்ளிச் சம்பவம் ஒன்று நினைவிற்கு வருகிறது. எங்கள் வகுப்பில் அஜந்தன் என்று ஒரு மாணவன். நல்லவன்,
மென்மையானவன், நன்றாக நடிக்க வல்லவன், சமஜோசிதம் தெரிந்தவன். ஒருநாள் ஆங்கில பாடத்திற்குரிய
நேரம், நம்மில் பலர் புத்தகம் கொண்டுவரவில்லை. பத்மா ரீச்சர் வகுப்பிற்கு வெளியே நிற்க வைத்துவிட்டார்.
புத்தகம் கொண்டு வந்த சிலரும் படிக்கும் கள்ளத்தில் புத்தகத்தை மறைத்துவிட்டு வெளியே வந்துவிட்டோம்.
பாடம் தொடர்கிறது. வகுப்பிற்கு வெளியே அஜந்தனுக்கு அருகில் நான். மெதுவாக ஏதோ ஒரு
நகைச்சுவையைச் சொல்லிவிட்டு அவன் கம்மெண்டு இருந்துவிட, இழிச்சவாயன் நான் எப்போதும்போல்
வாய்விட்டுச் சிரித்து வாங்கிக் கட்டிக்கொண்டேன். இது போதாதென்று அதிபரின் ரவுண்டப் ஆரம்பமானது.
வகுப்பிற்கு வெளியே எங்களைக் கண்டால், அதிபரின் அடிக்கு நிகர் கிடையாது. தூரத்தே
கண்டவுடன் குழப்பம் தொடங்கியது எங்களுக்கு. ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து முழுசத்
தொடங்கிவிட்டோம். எதிர்பாராதவாறு எங்கள் அஜந்தன் ஓர் நாடகத்தை அரங்கேற்றினான். ஐயோ என்று
கத்திக் கொண்டு மயங்கினாற்போல வீழ்ந்து விட்டான். ரீச்சர் முதல் எல்லோரும் பதறிப்போய் கலவரப்பட
பக்கத்தில் நின்ற ஒருவன் ‘ரீச்சர் அவர்காலமை சாப்பிடவில்லை.’ என்று அனுதாபம் காட்ட ரீச்சர் பயந்து
எங்கள் எல்லோரையும் உள்ளே அனுமதித்தார். உள்ளே தூக்கி வரப்பட்ட அஜந்தன் ராஜ
மரியாதைக்குள்ளானான். தண்ணீர் தெளித்து சூழநின்று விசிறிவிட்டு நாம் சேவை செய்ய, சூடான ரீ ஒன்றை
ரீச்சரின் காசில் குடித்து கூலாய் தன்னை சுதாகரித்த அஜந்தன், அப்பாவியாய் அசடுவழிந்தான். ரீச்சர்
போனபின் சிரித்தபடி இயல்பு நிலைக்கு வந்தான். எங்கள் ஆபத்து நிலையைக் கடந்த தெம்பில் வாய்விட்டுச்
சிரித்துக் குதூகலித்தோம் நாம். இவையெல்லாம் நேற்று நடந்த சம்பவம் போல் நெஞ்சில் இனிக்கிறது.
இப்படிச் சொல்ல ஆயிரம் உண்டு. முகட்டில் ஓடிய அணிலுக்கு சிவப்பு நிற வட்டக்கட்டரின் பின்னாடி
இருந்த கண்ணாடியை வெளிச்சத்தில் பிடித்து லைற் அடித்து பாலசண்முகநாதன் சேரிடம் வாங்கிய அடி
இன்னும் நினைவிருக்கிறது.
இன்றைய மாணவச் செல்வங்களுக்கு நிறைவாக ஓர் விண்ணப்பம் குறும்பு செய்யுங்கள். துணிந்து
செய்யுங்கள். ஆசிரியர்கள் இரசிக்கத்தக்க ஆயிரம் குறும்புகளை அள்ளிச் செய்யுங்கள். ஆசிரியர்கள்
மனநிலை அற்புதமானது. மாணவனைக் காணும் போதெல்லாம் ஆசிரியர்கள் மனதுக்குள் மத்தாப்பு வெடிக்க
வேண்டும். அந்த அளவிற்கு மரியாதையாய் மண்டியிடுங்கள். ஆசிரியர்கள் உங்கள் எதிரிகளல்லர். என்
வகுப்பறையின் மகிழ்ச்சிகள் சொன்னேனே. துன்பம் ஒன்றும் சொல்லிடவா? அது வகுப்பறைத் துன்பம் அல்ல.
என் வாழ் நாள் துன்பம். எங்களுக்கு பத்மா மிஸ்சிற்குப் பின்பு ஆங்கிலம் போதித்த ஆசான் வகுப்பறை
நாற்காலியில் அமர்ந்திருக்கிறார். அவர்முன் ஓர் மேசை அவருக்கருகில் நாங்கள் வரிசையாய் நின்று கொப்பி
காட்டுகிறோம்.
எனக்கு முன்னால் நின்றவன் கொப்பி காட்டிக் கொண்டிருக்கிறான் அவனுக்குப் பின் மறைந்து
நின்றபடி மேசையில் இருந்த வெண்கட்டியை எடுத்து அந்த ஆசிரியரின் பட்டப் பெயர் ஒன்றை ஆசிரியரின்
மேசையில் எழுதிவிட்டு எதுவும் தெரியாதவன் போல் நின்றுவிட்டேன். இது குறும்புத்தனம் அல்ல
என்னிடத்தில் உண்டான சின்னத்தனம். மேசையில் எழுதிக்கிடந்த பட்டப் பெயரைக் கண்டவுடன்
அதிர்ச்சியுற்ற ஆசிரியர் கோபத்தோடு வகுப்பைவிட்டு வெளியேறி விட்டார். நான் விபரீதத்தை உணர்ந்து
வருந்தினேன். என் தவறைச் சொல்லி மன்னிப்புக் கோரினேன். அதிகம் பேசும் பழக்கம் இல்லாத அந்த
ஆசிரியர் மௌனத்தோடு விலகிக் கொண்டார். மன்னிக்கத் தெரிந்த பெரியர் அவர். அதற்குப்பின்
யாரிடத்திலும் அவர் அது குறித்து அலட்டிக் கொண்டதாய் நான் அறியவில்லை. ஆனால் நான் செய்த
அந்தத் தவறை, என்னால் இன்று வரை மறக்கமுடியவில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக என் ஆங்கில
அறிவுக் குறைவிற்கு காரணம் நான் அந்த ஆங்கிலபாட ஆசானுக்கு செய்த அவமரியாதைதான் என்று என்
அடிமனம் இன்றுவரை சொல்லிக் கொண்டே இருக்கிறது. அதனால் தான் சொல்கிறேன். ஆசிரியர்கள் உங்கள்
காதலுக்கு உரியவர்கள். நான் என் உயிரிலும் மேலாய் வணங்கும் கம்பன் மீது ஆணையாய் சொல்கிறேன். நான்
ஒரு ஆசிரியத்துறை சார்ந்தவன் என்பதற்காய் இதைச் சொல்லவில்லை. என்னைப் புடம் போட்ட
ஆசான்களை மனதில் வைத்துத்தான் சொல்கிறேன். உங்கள் வீட்டுச்சுவாமி அறையில் உங்கள்
ஆசிரியர்களுக்கு இட ஒதுக்கீட்டை இன்றே அமையுங்கள். ஆசிரியர்களைத் துதியுங்கள் அனைத்தும்
கைகூடும் என் குருநாதர் உலகறிந்த பேச்சாளர் கம்பவாரிதி இ.ஜெயராஜ் ஐயா அவர்கள் தன்
வணக்கத்திற்குரிய குருநாதர்களின் திருவடிகளை தன் சுவாமி அறையில் வைத்து வணங்குகிறார். அதனால்
அவர் கண்ட ஏற்றங்களை கண்கூடாகக் கண்டபின்பும் அவர் வாயிலாகக் கேட்டபின்புமே இதனைச்
சொல்கிறேன். ஆதலினால் காதல் செய்வீர் ஆசிரியர் யாவரையும். வணக்கம்.