ஆசானின் பதமலர்கள் போற்றி நின்றேன்!

உவப்போடு இக்கவிதை எழுதுகின்றேன்

உளமெல்லாம் நிறைந்ததெனதாசான் தன்னை

தவப்பேறால் நான் பெற்ற தனித்த நல்ல

தமிழ்க்கடலை தன்னிகரில் தமிழால் என்னை

சுவைப்பேறு அடைந்திடவே செய்து நல்ல

சொல்லரிய இலக்கியங்கள் கற்றுத் தந்து

அவையெல்லாம் தலைநிமிர்ந்து நிற்கச் செய்த

ஆசானின் பதமலர்கள் போற்றி நின்றேன்.

 

“வாழ்நாளின் பேராசான்” என்றே போற்றி

வளமோடு பல்கலையும் ஏற்றி நிற்க

தாழ்வில்லாப் பெருமையினால் தரணி தன்னில்

தக்கபெரு அறிஞனுமாய் எழுந்து நின்றீர்

நாளெல்லாம் தமிழோடு கரைந்து நின்ற

நல்ல பெருந் தகுதியினால் நல்லோர் உம்மை

சால்பு மிகு அறிஞனெனப் போற்றி நிற்பார்

சகமெல்லாம் உம் புகழைப் பாடி நிற்போம்.

 

வகுப்பறையில் என் கருத்தைத் துணிந்து சொல்லி

வாதிட்ட போதெல்லாம் வெறுப்பே கொள்ளாத்

தகுதி மிகும் உமதன்பை என்னவென்பேன்?

தாய்ப்பசுவின் மடிமுட்டும் கன்றாய் எண்ணி

மிகுதி பெற மென்மேலும் தமிழைத் தந்து

மேதினியில் எனை வளர்த்த எந்தாய்! உங்கள்

மகவெனவே எனை நினைந்து வளர்த்தீர் தங்கள்

மாண்புமிகு அடிபணிந்து வாழ்த்துகின்றேன்.

 

Share :

Tag :
Comments :