“மே”ய்க்கும் கவிதை

blog image

பார் உயரப் பாடுபடு வோர்கள்
பணமுதலைப் பெரியர்களின் வேர்கள்
தார் தொடுத்துத் தக்கபடி
சூட்டுதற்கு எவருமில்லை
ஊர் பவனி கொள்ளும் நூறு கார்கள்


சம்பளத்தைக் கூட்டித்தரக்  கேட்டார்
சாம் வரைக்கும் தம் உழைப்பைப் போட்டார்
அம்பலத்துத் தோட்டமதில்
அரை உயிரை விட்ட பின்பு
ஐம்பதினை கூட்டினின்றார்  ஓட்டார்

அட்டைக்கடிக் கொடுமைகளில் செத்தார்
ஆயுளெல்லாம் உழைப்பினிற்கே வித்தார்
பெட்டை பெடி பெரியர் என்று
பெண்களொடு ஆண்களுமே
சட்டைத் துணி கூட இன்றிச் செத்தார்

பிள்ளை குட்டியோடு தாயும் சேர்ந்து
பிடுங்கிச் சேர்க்கும் கொழுந்துக் கூடை சார்ந்து
கொள்ளை செய்யும் கங்காணி
கொழுந்து நிறை பார்க்கிறப்போ
தள்ளி வைப்பான் தன் கணக்கைத் தேர்ந்து

வாழ்விடங்கள் போதியதாய் இல்லை
வந்தவர்கள் தங்க இடம் தொல்லை
பாழ்வறுமைச் சுமை அகற்ற
பட்டினியோடேகும் அவர்
தாழ்வகல யார்தொடுப்பார் வில்லை

Share :
Tag :
Comments