மதம் பரப்ப விரைந்து வந்தார் பாதர்
மன்றாடித் தொழுது நின்றார் மாதர்
இதம் தருவார் என்றிருந்து
ஏங்கியவர் யாவருக்கும்
நிதம் வருந்த நோய் கொடுத்தார் போதர்
அறிவியல்
உலகியல் தான் உண்மை என்றார் மூடர்
உணரவில்லை ஊழ்வலியின் ஓடர்
விலங்கொடு சேர் பறவை இன
விஷத்தையெல்லாம் விழுங்கியின்று
பலமிழக்க நோய் கொடுத்தார் வேடர்
அரசு
வீட்டுக்குள்ளே இருக்கும்படி சொன்னார்
விஞ்சு பசி போக்க வழி பண்ணார்
வோட்டுப்பிச்சை கேட்டு வந்து
வாசலிலே நின்றபின்பு
நாட்டு நிலை எதைக்கண்டார் அன்னார்
பெண்ணியம்
ஆண் பெரிதா பெண் பெரிதா போட்டி
ஆயுளெலாம் இப்பகையை மூட்டி
வீண் பெருமை பேசியொரு
விழல்க் கூட்டம் அலைகிறது
தாண்டவொண்ணா ஆணவத்தைக் காட்டி
வறுமை
தினம் உழைத்து உண்டு வந்தான் காந்தன்
திண்டாட்டம் அறியா நற் சாந்தன்
வனவாசம் புக்கது போல்
வந்துதித்த ஊரடங்கால்
கனநாளாய் உணவிழந்தான் அவ் வேந்தன்
ஊழ்;
வல்லரசும் மாழ்கிறது நோயால்
வந்துதித்த கோரோனாப் பேயால்
எல்லையில்லை எம் வளர்ச்சிக்
என்றேப்பம் விட்டவரை
தொல் இறைவன் நகைக்கின்றான் வாயால்
தோசம்
முடமுற்றுக் கிடக்கிறது தேசம்
முன் விளைவால் வந்ததிந்தத் தோசம்
தொடர்புற்ற உறவுகளை
தொலை தூரம் விலக்கி வைத்து
துடக்காக்கி விட்டதையோ! மோசம்
துடக்கு
ஆலயங்கள் செல்ல வேண்டாம் அனைவருமே கண்டீர்
ஆண்டொன்று பிறந்ததினால் துடக்கெல்லோ கண்டீர்
காலமுற ஓர் மாதம்
காத்திருந்து பின்பு
நீலமணி மிடற்றானை நேர்ந்திடலாம் தொண்டீர்
அரசியல்வாதி
மக்கள் துயர் துடைப்பதெங்கள் சேவை
மாற்றமில்லை அதுவே நம் கோவை
திக்கறியாதிருள் சூழ்ந்து
திகைப்புற்றிருக்கின்ற
இக்கணமும் தேர்தல்தான் தேவை
தனித்திரு
ஊரடங்கு எடுத்தாச்சு என்று
உருண்டோடித்திரியாதே கன்று
ஆருன்னை நெருங்குதற்கும்
அனுமதியாதே தம்பி
பேருந்தில் கூட இது நன்று
முயற்சி
சுந்தரம் என்பான் பிறப்பால் ஏழை
சுமை பலதால் நொந்தழிந்தான் காளை
வெந்துயரம் வாட்டயிலும்
விட்டகலா உழைப்பதனால்
முந்து செல்வம் பெற்றிடுவான் நாளை
Comments