உலகை ஆளப் பிறந்தோரும்
உணவுக் கலைந்து திரிவோரும்
விலக்கு இன்றி வீழ்வார்கள்
விஞ்சும் விதியின் வலையதனில்
நிலைக்கும் வரங்கள் ஒரு நூறு
நிறையப் பெற்ற பலபேரும்
தலைக்கு மண்ணைத் தாம் கொட்டித்
தம்மால் அழிந்த கதை உண்டு
கணக்குப் போட்டு வாழ்ந்தோரும்
கடவுள் செயலென்றிருந்தோரும்
திணறிப் போகத் திசைமாற்றித்
திகைக்கச் செய்வது வல்விதியாம்
நினைக்கும் செயல்கள் நிறைவேறி
நிலைக்கும் பேற்றை யார் பெற்றார்
இணக்கம் கொண்ட விதி இருந்தால்
இமயம் தொடலாம் இமைப்பொழுதில்
கொற்றவன் ராமன் கோமகளோடு
கோட்டையை நீத்ததுவும்
கற்றவர் காணக் கண்ணகி நங்கை
கைம்பெண் ஆனதுவும்
விற்பெரும் வீரர் விஜயன் முதலோர்
விரிவனம் கண்;டதுவும்
நற்பெரு நாதன் நமக்கென வகுத்த
நலிவறு விதி அதனால்
தாயவளோடு தளிர் இளம் பிஞ்சு
தவித்து இறந்ததுவும்
பேயது தின்னப் பிணமென ஈழப்
பெருங்குடி மாண்டதுவும்
சேயது மிஞ்சித் தாயவள் துஞ்ச
செவிலிகை வளர்வதுவும்
தூயவனே உன் துணிவுடை கைகள்
துலக்கிய விதியருளோ ????
வென்றனம் என்று வேற்றுமை கொண்டு
வெறியர்கள் ஆடுவதும்
மன்றது சென்றோர் மௌனித்திருந்து
மானம் இழப்பதுவும்
கொன்றவர் இன்று கொற்றவர் என்றே
கொள்கை வகுப்பதுவும்
நின்றருள் செய்யும் நேயவனே உன்
நிறைகரம் வரை விதியோ ? ?
வாயது கட்டி மூக்கது பொத்தி
வணங்கிட வழி செய்தே
நாயொடு பூனை போல் இடை விட்டு
நலமென அது பேணி
பேயது கண்ட சேய் என அஞ்சி
பேழையில் அடையுண்ண
நோயது வாட்டும் நூதனப் போக்கும்
நுதல் விழி வரை விதியோ ???
காதலைப் பகையை நட்பை
கைவருந் துணையை என்றும்
மோதலை முகிழ்ந்த அன்பை
மோகத்தை முத்தி தன்னை
நோதலை ஈர்ப்பை இன்பாம்
நொடியினை அருளும் மாயை
சாதலை சகத்துள் வைகும்
சணத்தினைத் தரும் கை நீயோ ?
ஏழை செல்வன் பேதம் இல்லை
எவரும் விலக்கில்லை
கோழை வீரன் கற்றோன் மூடன்
கொள்கை மறுப்பில்லை
காலன் கவரும் வேளை அதிலும்
கருணைக்கிடமில்லை
ஞாலக்கிழவன் பாதம் பணிந்தால்
நன்றென வாழ்வோமே
Comments