கவியோ சொல்லோ எழுத்தொன்றோ ?
கருதும் பொருளோ எனதில்லை
தவியாய்த் தவித்தால் தாள்பணிந்தால்
தந்தே உதவித் தலைதடவி
புவிமேல் எனையும் புலவன் போல்
புகழால்ப் பொலியச் செய்கின்றான்
அவிபொருள் எதை நான் அவற்க்கீவேன்
அருந்தமிழால் கவி நான் தொடுத்தேன்
கொண்றொழித்து கொலைகள் கூட்டி
கொரோனா தின்ற போதிலும்
நன்று கவிதை மாந்து நேயர்
நல்ல சிந்தை மெச்சுவோம்
பொன்றியுடல் பொசுக்கி மனம்
போர் அழித்த போழ்திலும்
தின்றுடாமல் தமிழைக் காத்த
தீர வாழ்வுத் தேசமே!
வல்லவன் வகுத்ததாம் வலிமிக்க ஊளை
தாழ்வென எண்ணியே வாடி
தங்கள் தலைச்சுமை என்றுமே புலம்புவோர் கோடி
பாழ் உடல் வெந்து நீறாகி - இந்தப்
பாய் விட்டகல மாட்டேனோ ?
சூழ்விதிச் சுமை அகன்றென்றோ - நல்ல
சுதந்திரம் காண்பதென் றலறுவோர் கோடி
வாழ்வெனும் இன்ப நற் போதை - அதை
வறுமையாய் உணர்பவன் உலகிலே பேதை
ஆழ் கடல் எல்லைகள் தாண்டி
அதில் அமுதையும் முத்தையும் அலைந்துமே தோண்டி
தாழ்விலாச் செல்வனாய் வாழ்வான் நன்று
தன்மனச் செழுமையை உணர்ந்திடும் மேதை
கோள் குறை சொல்லியே கூவி மனம் கொதித்தழும்
கோழைகள் சிரிப்பதெக்காலம் ?????
எது உண்டு என் கையில் என்று
ஏங்கியே கிடக்கின்ற முடத்தனம் வென்று
புதுவழி கண்டுழைத்து ஓங்கு
புத்தியாம் கடலிலே நித்தமும் நீந்து
மது உண்ணும் வண்டினைப் போன்று
மயங்கியும் முயங்கியும் மகிழ்ந்தொன்றி ஊன்று
இது எங்கள் கைசேர்ந்த நூலாம்
ஏற்றம் விழைக்கின்ற மந்திரக் கோலாம்
எண்ணம் போல் உன் வாழ்வுயரும்
ஏற்றம் தானாய்க் கூடிவரும்
பண்ணும் கனவே பகலிரவாய்
பாதை அமைக்கும் பலம் சேர்க்கும்
திண்ணம் கொண்டே தீரமுடன்
தீயாய் நீ உன் திறம் ஈவாய்
அண்ணல் காந்தி அகிம்சைப் போர்
அதுவே சாட்சி அறம் உணர்வாய்
அரக்கன் சிறையில் அபலையென
அன்றோர் சீதை துடித்தனளாம்
துரத்தும் பெரும் போர்ச் சேனையிடை
துயரம் தாங்கா வெடித்தனளாம்
சிரத்தை இழப்பாய் ! சேர் என்னை
சிம்மாசனத்தில் ஏற்றுகிறேன்
வருத்தம் விடுத்தே வா! என்று
வாள்ப்பல் இராவணன் கடித்தனனாம்
சூழக்குவிந்த அரக்கியரை -அன்று
சுட்டெரித்தாற்போல் அச்சுறுத்தி
ஆழக்கிடந்த தன் ஆசையினால்
அன்றவள் வெற்றியும் பெற்றெழுந்தாள்
நீளக்கடல் சூழ் இலங்கையினை
நீறாக்கத்துணிந்தாள் கற்பதனால்
மாளக்கருதி இருப்பதுவோ ? நாம்
மண்ணில் களிக்கப்பிறந்தவரோ ?
மரணம் வென்ற மார்க்கண்டன்
மகிமை வாழ்வே கண்கூடு
கரணம் நான்கும் கருத்தொன்றக்
கருதும் எண்ணம் கைகூடும்
விரதம் கொள் உன் கொள்கையிலே
விண்ணும் கூடக் கைசேரும்
நிரதம் பேணும் நேர்மையதால்
நீளக்கடலும் வழிவிடுமே
நம்பிக்கைகள் நெஞ்சமதில்
நலியாதென்றும் நிலை நின்றால்
அம்பின் கூர்மை அதை ஒத்து
அசையா விசைபெற்றேகுமெனில்
கம்பக்கவிபோல் சுவையூட்டும்
களிப்பால் வாழ்வை ஒளியூட்டும்
தெம்புற்றுயர்வோம் தெளிவுறுவோம்
தேனாய் எங்கள் வாழ்வினிக்கும்
ஆறுமாதம் முன் ஒரு நாள்
அவனி முழுதும் உறையும் என
தேறி ஒருவன் சொல்லி நின்றால்
செருப்பைக் கழட்டி அடித்திருப்போம்
பாறி விழுந்த பாழ்மரம் போல்
பரந்த பூமி முழுவதுமே
நூறு நாளாய் மூச்சிழந்தோம்
நுண்ணிய கிருமி விரட்டியதே
கடவுள் இல்லை என்றுரைத்தார்
காலம் வெல்வோம் என்று நின்றார்
உடலின் உறுதி உள உறுதி
உயர்ந்த அறிவே வெற்றி என்றார்
விடயம் கேட்டால் வியப்பாகும்
விரிந்த நோயால் வீட்டிருந்தார்
தடயம்கூடத் தெரியாமல்
தரணிமுழுதும் ஒளிந்ததுவே!
நேற்றுவரைக்கும் விஞ்ஞானம்
நெஞ்சை நிமிர்த்தி நடைபோட
பார்த்து இருந்த பாமரரும்
பரன் தாள் மறந்து சிலிர்த்தனராம்
காற்றைக்கூடக் கட்டிடுவோம்
கடவுள் எங்கள் காலடியில்
மாற்றம் கண்டது எது இங்கே
மந்திரக் கோல் செய் மாயமிது
செயல்விதி பலதும் கண்டுடிட்டோம்
செவ்வாய்க்கிரகம் சென்றிடுவோம்
அயல்க்;கிரகங்கள் அனைத்திலுமே
அடியெடுத்திடுவோம் என்றார்கள்
புயலெனவந்த ஒரு நோயால்
புவனி முழுதும் அடங்கியதே
நயமுறும் நம் பெரும் வீரமதை
நகைத்துப் பிற உயிர் சிரிக்கிறதே
இந்திர வாழ்வும் இறுதி பெறும்
இரணிய வீரம் அழிவு உறும்
சுந்தரவடிவம் சோதி கெடும்
சுரர் நரர் அமரர் வாழ்வு படும்
அந்தரத்து ஈசன் அருளதனால்
அனைத்தும் நன்றே கூடி வரும்
மந்திரக் கோலால் மாறி வரும்
காலக்குதிரை கனைத்தபடி
கண்ணைமூடிப் பாய்வதுவும்
வாலைப்பருவச் செடி கொடிகள்
வளமாய் பூத்துக் காய்ப்பதுவும்
கோலக்குமரி கொள் அழகால்
கொஞ்சிக் குமரன் அலைவதுவும்
ஞாலத்தியற்கை அத்தனையும்
நன்றே மாற்றும் மனமந்திரக் கோல்
இயற்கை அமைத்த ஒழுங்குதறி
இல்லா ஒழுக்கம் பல சேர்த்து
மயங்கித்திரிந்த மண் உலகை
மண்டியிடச் செய் மாயமெதோ ?
தயக்கம் கொண்;டோம் தள்ளி நின்றோம்
தலைகாட்டிடாமல் உள்ளிருந்தோம்
நயக்கும் சொல்லால் கவிதொடுக்க
நமக்கென்றேதும் பெருமையுண்டோ ?
ஈழப் போரின் தோற்றம்மதும்.
இறுதிப் போரின் மாற்றமதும்
காலத்தேவை ஆகியதும்
கண்டு கொள்ளத் தவறியதும்
நீளப் பொய்கள் நீண்டதுவும்
நெஞ்சக்கனல்கள் மூண்டதுவும்
வேழப்படைகள் மாண்டதுவும்
வெல்லா விதியாம் மந்திரக்கோல்
Comments