உன்னதமாம் மனிதத்தின் உயரம் தாண்ட
ஊற்றெனனான் அறிவதனின் பாதை தேடி
அன்னமொடு நீர் தூக்கம் அனைத்தும் நீத்து
ஆண்டுபல முயன்றிடவும் சித்தம் கொண்டேன்
திண்ணமொடு தீவிரமாய்த் திறங்கள் சேர்த்து
தீயாக நான் வேகித்தகித்த போதும்
மன்னு புகழ் மாயை அவள் மனதில் பூந்து
மாமாயம் பண்ணுகிறாள் யாரொடு நோவேன்
புத்தகத்தில் கை வைக்கப் புகுந்தால்ப் போதும்
புதிதாகத் தடை நூறு அவளே செய்வாள்
நித்திரையைப் பசியதனை நீண்ட நோயை
நீலியவள் தந்தெந்தன் நெறியை மாற்றி
கத்திரிக்குள் அகப்பட்ட கயிற்றைப் போலே
கால் வேறாய்த் தலைவேறாய் சிதைப்பாள் பாவம்
வித்தகன் நான் வேறு வழி ஏதும் இன்றி
விரல்பிடித்த குழந்தையென அவள்பின் செல்வேன்
யூடியூப்பில் நல்லோர்தம் பேச்சைப் போட்டால்
யுவதிகளின் குத்தாட்டம் மனதை ஏய்க்கும்
நாட்டினது நடப்பேனும் அறிவோம் என்றால்
நாலு செய்தி அறியுமுன்னே நடிகை நிற்பாள்
காட்டுகிற கவர்ச்சியினால்க்; காலந்தோறும்
கட்டறுந்த என்மனது களிப்புக் கொள்ளும்
பாட்டெழுதப் புகுந்தாலோ பாவி என்னை
பாழ்மனது வெல்லுதய்யோ யாரொடு நோவேன்
படிக்க எனப் பக்குவமாய் அமரும் வேளை
பாதியொரு தேங்காயைத் துருவித்தாரும்
அடுப்படியில் இருந்தபடி அன்பாய் கேட்கும்
அகமுடையாள் வேண்டுதலை மீறலாமோ ?
விடிந்தபடி விழித்திருக்கும் பொழுது நீண்டு
விஞ்சுமிருள் கூடாதேல் மறுத்தல் கூடும்
துடித்தெழுந்த இளமையது தொலைந்தால்த்தானே
துறவுடனே துணிந்திருந்து படித்தல் கூடும்
ஒருநாளுக்கொரு பாடல் மனனம் என்று
உறுதியுற முடிவெடுத்து வாரம் போகும்
பெருநோயாய் மறதிவரும் பெரும் போர் செய்யும்
பேணியதாம் இலட்சியமும் பொய்த்தே போகும்
ஒரு பந்தி படித்தாலும் போதும் என்று உட்கார
ஓங்கிய என் ரெலிபோன் கத்தும்…………
அருந்தவமாய் அறிவதனை அணுகும் பாங்கை
ஆண்டவனே அருள் எனக்கு நீயே தஞ்சம்
நெல்லருகே நின்றதனின் வளத்தை மாந்தும்
நீசகுணப் புல்லைப்போல்ப் பொழுதைத் தின்று
தொல்லைதரும் தொலைபேசித் தொடுகை விட்டுத்
தோசமென ஒருவாரம் தொலைவில் நின்றேன்
அல்லலிலா அமைதி சுகம் அதனைச் சொல்ல
ஆன்றதமிழ்க் கவிதைக்கும் வலிமை இல்லை
கல்லென நான் உறைந்தபடி காலை மாலை
கணக்கிறந்த நூல்பலதை கற்றேன் உண்மை
பெருக்கெடுத்த அறிவருவிச் சுணையில் நீந்திப்
பேச்சற்றுப் பிரமையற்று மூழ்க வேண்டும்
நெருப்படுத்த நெய் போலே நெகிழ்ந்து சிந்தி
நேரெழுந்து அறிவுயர உதவ வேண்டும்
விருப்பெடுத்து விரிந்த உலகு அதனுள் எய்தி
விந்தை சுகம் கண்டதனில் லயிக்க வேண்டும்
கருத்தெடுத்த இலட்சியமாம் கம்பன் வாழ்வு
காலத்தை வென்றென்னுள் நிலைக்க வேண்டும்
Comments