பெற்றதாயினும் பெரிதுவந்து எனைப்பேணி
பேர் புகழ் பரிசெனப் பெற்றிடச் செய்பவள்
கற்றதோர் துளியதில் காசினி வெல்லெனக்
காட்டியபாதையில் கவிதைநெய் தருபவள்
விற்பனைப்பொருளென வீதியில் விட்டிடாள்
வீம்புடன் வாழ் என வரம் தந்து பேணுவாள்
மற்றுமோர் மொழி நானறியேன் இவள்
மையலில் என் உயிர் வாழும் உண்மையே
அன்னை மொழி இவள் ஆயுள் முழுவதும்
ஆண்டுகொண்டின்புற வேண்டினின்றேன்
கன்னல் கவிச்சுவை காச்சிய பாகிவள்
காலத்தை வென்றென்னுள் ஊற நின்றேன்
முன்னைத்தவப்பயன் போலும் என்னை இவள்
மூண்டதிக்காதலில் மூழ்கவைத்தாள்
பின்னைப் பிறவிகள் ஆயிரம் உண்டெனில்
பேணிடுவாய் அம்மா பிள்ளை என்னை
கம்பன் எனும் கவி நெஞ்சில் நிறைந்திடக்
காரணம் இங்கிவள் தண்ணளியே
நம்பும் இறையருள் நான் பெற்று இன்புற
நல்லருள் ஈந்ததும் இங்கிவளே
தெம்புதரு புகழ் தென்னவள் என்னையும்
தேடி அழைத்தினிதாண்டனளே - எந்தக்
கொம்பனும் என்னை எதிர்க்க நினைக்கையில்
கொல்கரம் கொண்டெனைக் காப்பவளே
பிஞ்சு வயதில் என் காதருகே இவள்
பிள்ளைக் கதையென வந்து நின்றனள்
நெஞ்சு நிறைந்திட நீதிநெறி நிறை
நேயக்கவிகளில் நீந்த வைத்தனள்
பஞ்சினை விஞ்சிய மெல்லியலாள் இவள்
பாதமதைப்பற்றி மேலெழுந்தேனரோ
தஞ்சமென இவள் தாமரைப் பாதங்கள்
தாங்கிட நான் செய்த பேறுதான் யாவதோ?
Comments