உலகளாவி விரிந்து நிற்கும் எங்கள் தமிழிலக்கியத்தில்,
நிறைந்துகிடக்கும் சொத்துக்களின் அளவிற்கு எல்லையில்லை.
எந்தவொரு இலக்கியத்தை எடுத்தாலும் அது,
எம்மை ஈர்த்துத்,தனக்குள் கரைத்துக் கொள்கிறது.
அவற்றைப் படிக்கும்போதெல்லாம் வியப்பினால் இதயம்,
விரிந்து போகிறது. அப்படி எம்மை ஆச்சரியப்பட வைக்கும்,
அழகுத் தமிழ் இலக்கியங்களாக,
பேரிலக்கியங்கள் தான் இருக்கின்றன,
என்று தவறாக எண்ணிவிடக் கூடாது.
சிற்றிலக்கியங்களும் ஒன்றும் குறைந்தவை அல்ல.
ஃ ஃ ஃ ஃ ஃ ஃ ஃ ஃ ஃ ஃ ஃ ஃ ஃ ஃ ஃ ஃ ஃ ஃ ஃ
பாடல் எண்ணிக்கை,
பெருங்காப்பியங்களுக்குண்டான அடிப்படை நியதிகள் என,
சில ஒப்பீடுகளால் அவை சிற்றிலக்கியங்களாக,
வரையறை செய்யப்பட்டாலும் கூட,
கவித்துவத்தால், கதைச்சிறப்பால் பேரிலக்கியங்கள் போல்
சிற்றிலக்கியங்களும் சிறப்புற்று நிற்பதை மறுப்பதற்கில்லை.
இவ்வாறு சிற்றிலக்கியமாக விளங்கிச் சிறப்புற்று நிக்கும்
ஓர் இலக்கியம் தான் “ முத்தொள்ளாயிரம்”
ஃ ஃ ஃ ஃ ஃ ஃ ஃ ஃ ஃ ஃ ஃ ஃ ஃ ஃ ஃஃ ஃ ஃ
முடியுடை மூவேந்தர்களான சேர,சோழ,பாண்டியர்கள்
ஒவ்வொருவரைப்பற்றியும் தொள்ளாயிரம் பாடல்களால் பாடினின்ற
நூல் என்ற வகையில் இப்பெயர் பெற்றதாகச் சொல்லப்படுகிறது.
ஆனால் தற்போது இந்நூலின் முழுமையான பாடல்களும்
கிடைக்கப்பெறவில்லை.
மிகச் சொற்ப்பமான பாடல்களே கிடைக்கப்பெற்றுள்ளன.
இந்நூலைப் பாடிய புலவர் பெயரும் இன்று அறிதற்கில்லை.
முத்தொள்ளாயிரத்தின் அத்தனை பாடல்களும் அற்புதமானவை.
ஆகா என்று வியப்பூட்டி நிற்கும் வீரியக் கவிச்சிறப்புடையவை.
அவை எடுத்தியம்பும் நம் தமிழ் மன்னர்களின் வீரம்,
கொடை,காதல்,நட்பு. தேசப்பற்று என,
இத்தியாதி இத்தியாதி மிக மிக அதிகம்.
அவற்றைச் சுவைத்தால் இதயம் பேருவகை கொள்கிறது.
பெருமிதமும் பூரிப்பும் நெஞ்சை நிறைக்கின்றன.
கவிதையால் வரைந்த காட்சிகள் கற்பனை ஊற்றைப,;
பிரவகிக்க வைக்கின்றன.
நம்மை மறந்து நாம் வேறோர் உலகில் சஞ்சரிக்கிறோம்.
இதயம், நிறைகிறது. விரிகிறது.
இன்பக்கடலில் துளையமாடுகிறது.
இத்தகைய சுகானுபவத்தைத்தந்து கொண்டிருக்கும் சிறப்பு,
தமிழின் எல்லா இலக்கியத்துக்கும் உண்டு.
வாருங்கள் அவற்றை மாந்தி மகிழ்வோம்.
ஃ ஃ ஃ ஃ ஃ ஃ ஃ ஃ ஃ ஃ ஃ ஃ ஃ ஃ ஃ ஃ ஃ ஃ
பதச்சோறாய் இந்த முத்தொள்ளாயிரத்தில் ஓர் பாடல்
சேர அரசர்களில் பெயர் பெற்ற ஓர் பேரரசன் செங்கண் மாக்கோதை.
எப்போதும் போர்க்குணம் மாறாதவன்.
கோபமிகுதியால் சிவந்த கண்களை உடையவன்.
பகையரசன் ஒருவனோடு போர் செய்கிறான்.
அவனது வலிமை மிக்க யானைப்படைகள்,
போர்க் களத்தை உண்டு இல்லை என்று பண்ணியபடி
வலம்வருகின்றன.
அவ்வாறு வருகின்ற யானையில் ஒன்று,
தன் வீர விளையாட்டை வெகு சாகசமாக ஆற்றிக் கொண்டு
அங்கும் இங்கும் திரிகிறது.
பகையரசர்களது தேரின் மேல் விளங்குகிற
விரிந்த பூ மாலை சூடப்பெற்ற வெண் கொற்றக்
குடைகளையெல்லாம் தன் துதிக்கையால் சிதைத்து எறிகிறது.
அவற்றைத் தன் காலின் கீழ்ப் போட்டு மிதிக்கிறது.
இதைத் தன் வேலையாகவும் விளையாட்டாகவும்,
அன்று முழுவதும் ஓய்வின்றிச் செய்துவருகிறது.
ஃ ஃ ஃ ஃ ஃ ஃ ஃ ஃ ஃ ஃ ஃ ஃஃ ஃ ஃ ஃ ஃ ஃ ஃ
மாலை மயங்கி இரவாகும் தருணம்.
வானில் பூரணத் திங்கள் திசையொளி பரப்பிக் கொண்டு வருகிறது.
உயரத் தோன்றல் வட்டவடிவாய் காட்சி தரல்,
வெண்மையாய் ஒளிவீசல் என்பவற்றால்
வெண்ணிலவின் தோற்றமும் வெண்கொற்றக் குடையின் தோற்றமும்
ஒத்து விளங்குகிறது.
பகையரசர்களின் வெண்கொற்றக் குடைகளை
சிதைத்த தன் பழக்கத்தில் இருந்து மீளாத
அந்தச் சினம் மிகுந்த யானை
தான் சிதைக்கத்தவறிய ஓர் வெண் கொற்றக்குடை
இன்னமும் ஒன்று மிச்சமாய் இருக்கிறது
அதையும் விட்டுவைக்காது சிதைத்துவிட வேண்டும்
என்று எண்ணி வீறுகொண்டு திங்களின் மேல்
தன் கையை நீட்டியபடி செல்கிறது.
எப்படி இருக்கிறது அந்தப் பெயர் தெரியாத புலவனின்
புதுவிதமான கற்பனை.
இதோ பாடல் பிறக்கிறது…
வீறுசால் மன்னர் விரிதாம வெண்குடையை
பாற எறிந்த பரிசையத்தால் - தேறாது
செங்கண் மாக்கோதை சினவெங்களியானை
திங்கள்மேல் நீட்டும் தன்கை
சேர அரசனின் யானைப்படையை
அதன் வீரசாகசத்தை
போற்றிப்பாட வேண்டும்.
அப்படி அடித்தது. இப்படி அடித்தது.
தூக்கியெறிந்தது. மலையைக் குடைந்தது.
என்று குண்டுச் சட்டிக்குள் சவாரி செய்யாமல்
ஒரு புதிய பாதையில் கனைத்துப் பறக்கிறது
அந்தப் புலவனின் கற்பனைக்குதிரை.
அந்தக் குதிரையில் ஏறி நாமும் சவாரி செய்வோம் வாரீர்!
ஃ ஃ ஃ ஃ ஃ ஃ ஃ ஃ ஃ ஃ ஃ ஃஃ ஃ ஃ ஃ ஃ ஃ ஃ
Comments