நாட்டில் உள்ள யாவருக்கும் நலம் பயக்கும் என்று சொல்லி
வீட்டிருக்கப் பணித்தார்கள் சரிதான் - போட்டிருந்த
ஊரடங்கு வேளையிலும் உசுப்புகிற பகை வளர்த்து
போர்தொடுத்தார் வாள்ப்பாணம் பார்
நாட்டில் சனக்கூட்டம் நலிந்தாக வேண்டும் என
வீட்டில் அது பெருக்கி விட்டீரேல் - நாட்டமுடன்
ஊரடங்கு போட்ட உயர் நோக்கம் கூடாது
பாரடங்கும் சுமை கூடித்தாண்
உணவருந்து முன்னம் உடல் கை முகம் கழுவி
மணமுள்ள வாசனைகள் போட்டிடுக - குணமுள்ள
குலக் கொடியோடானாலும் குறித்தபடி பேணிடுக
நலமோடு ஒருமீற்றர் நன்று
தாய் பிள்ளையானாலும் தந்தை மகனானாலும்
நாய் பூனை போற் தூர நிற்க - வாய்மூடி
வருகிருமிப் பெரியோனை வழியனுப்பி விடைகொடுத்தால்
அருகிருந்து பேணிடலாம் அன்பு
காலை முதல் மாலை வரை கண்ணுற்றபடி இருந்தால்
வேலைக்கு ஆகாது வீட்டை விட்டு - சாலையிலே
நடமாடி வந்தாற் தான் நலியாது மனித மனம்
இடங்கொடுத்து இரங்குவார் யார்
ஆண்டவனே உன் அடியைத் தொழுதேன் வாழி!
வேண்டுவது வேறொன்றும் இல்லைக் கண்டாய் - நீண்டசுகம்
இருமலொடு தடிமன் இலா இயல்பாம் வாழ்வை
அருகில்உள்ள அனைவருக்கும் தா
மூன்று மணி நேரம் முழுதாகக் காத்திருந்து
நான் புகுந்த வேளை நலிந்த ஒரு - சாணளவு
கறிவேப்பிலைக் கட்டே கிடைத்த கதை நான் கூறின்
பறிபோகும் என்மானம் பார்
ஆறு மணி நேர அவகாச அறிவிப்பில்
ஊரடங்குச் சட்டத்தை உமதாக்க - ‘பார்’தேடி
மீன் இறைச்சி உண்டா ?மெதுவடைதான் எங்கென்று
வீண்பொருட்கள் தேடுவது வீண்
இப்படியே நிலை தொடர்ந்தால் இடி விழுந்த மரமாகி
இப் புவி உளோர் எல்லாம் இடர் உறுவர் - தப்பாது
பஞ்சமழை பெய்தவனி பாழாகப் போகு முன்னே
தஞ்சமழை கொஞ்சமேனுந் தா
வீட்டில் இருக்கையிலே விஞ்சு பசி எடுக்கிறது
போட்டிருக்கும் சட்டமதால் போய் வரவும் - நாட்டமில்லை
பஞ்சமழை பெய்தவனி பாழாகப் போகு முன்னே
தஞ்சமழை கொஞ்சமேனும் தா
Comments