மணியார் கொடிப் பூ மல்லிகையே

blog image

உலகைத் தன் ஓர் கைப்பைக்குள்

உருட்டிக் கொண்டு திரிந்தவனே

பலகை ஒதுக்க விலகாது

பந்தாய் உலைந்து எழுந்தவனே

நிலவைத் தேடி நீள் சிறகை

நிமிர்ந்து விரித்த பெரியவனே

சிலகை அறியும் உன் சிகரம்

சிறப்பாய் வாழ்ந்தாய் போய்வா நீ

 

கொழுத்தும் வெயிலில் வழி நடந்து

கொள்கைக்காக உழைத்தவன் நீ

வெழுக்கும் உடையில் வேகி நிதம்

வெறிகள் கழைந்து முடித்தவன் நீ

அழுக்குப் படிந்த அவனியினை

அசுத்தம் நீக்கித் துவைத்தவன் நீ

சழக்கர் நிறைந்த சமுகமதில்

சத்தியம் காக்க முயன்றவன் நீ

 

மனிதம் மறந்த கயவர்களை

மண்ணில் என்றும் மதியாது

துணிவாய்த் தூக்கி எறிந்தவன் நீ

தூசய்க் கருதி இருந்தவன் நீ

அணியும் உடைபோல் அகமும் தான்

அசுத்தமின்றி இருந்ததனால்

புனிதம் உந்தன் வசமாச்சுப்

புகழே உனக்கு நிறமாச்சு

 

சாதி என்றும் மதம் என்றும்

சண்டை இட்டு நொந்தழிந்து

மோதி உதைத்த கூட்டத்தை

முகத்தில் உமிழ்ந்து மிதித்தவன் நீ

போதிமரத்துப் புத்தன் போல்

பொய்தீர் ஒழுக்க நெறி நின்று

நீதியாகம் வளர்த்தாய் நீ

நின்னை வெல்ல யார் வந்தார் ?

 

மரபுப் புலத்தில் வேர் விட்ட

மணியார் கொடிப் பூ மல்லிகையே

கரையும் மானம் காத்திட்ட

காதித் துணியே கலைநிதியே

விரையும் உலகப் புதுமைக்குள்

விலைபோகாத வித்துவமே

நரைக்கும் வரைக்கும் நரைக்காத

நனி ஆர் கொள்கைப் பொக்கிஷமே

 

கம்பன் கழகச் சொந்தமெனக்

கைகள் கோர்த்த பெரும் உறவே

எம்மை வருத்திச் சென்றனையே

ஏக்கம் கொண்டது எம் இனமே

செம் பொன் தமிழை நெஞ்சமதில்

செழிக்கச் சுமந்த மல்லிகையே

அம்பொன் மலர்சேர் தவிசிட்டு

அமரர் உனக்காய் காத்தனரோ ?

 

Share :
Tag :
Comments