உறக்கக் கடலில் அலை வற்றி
உறைந்து கிடந்த பொழுதொன்றில்
சிறக்கும் விதமாய் எனக்குள்ளே
சிந்தை கவர்ந்த கனவொன்று
பறக்கும் மனதை பக்குவமாய்
பருவ மங்கை தாலாட்ட
இறக்கம் காண வேண்டாது
இமையம் தொட்டது என் இதையம்
அடர்ந்த காடோ அச்சமுற
அடிக்கத் துரத்தும் குண்டர்களோ
உடைந்த சுவரோ உட்புகுந்தால்
உல்லாசத்தின் தெப்பல்களோ
கடந்த வாழ்வோ கற்பகமோ
கருத்தில் நில்லா சொப்பனமோ
நடந்த செய்கை நினைவலையோ
நானறியேன் காண் பராபரனே
எண்ண மங்கை எனை இழுத்து
எங்கோ கொண்டு செல்கின்றாள்
வண்ண நிலவும் வான் அழகும்
வடிந்து சிரித்த விண்மீனும்
உண்ண உண்ணத் திகட்டாத
உயிர்ப்பு மிக்க இயற்கைகளும்
என்னை அங்கு ஈர்த்திருக்க
ஏதும் அறியாதிருந்துவிட்டேன்
கண்ணை மூடித்திறப்பதற்குள்
காட்சி ஒன்று என் முன்னே
விண்ணை ஆளும் விரிகடவுள்
வீடு நல்கும் சிவன் அவன்தான்
பெண்ணைப் பாகம் கொண்டபடி
பெருந்தவ வடிவாய் அமர்ந்திருந்தான்
என்னை நோக்கிச் சிரித்தபடி
இதமா பயணம் எனக் கேட்டான்
துள்ளி எழுந்து ஓடுவதா ?
தூயோன் பாதம் பணிவதுவா ?
அள்ளி எறிந்த அதிசயத்தில்
ஆடிப்போய் நான் உட்கார்ந்தேன்
தள்ளி எந்தன் தாள் அருகே
தாம்பூலம்சேர் பெட்டி ஒன்றை
வெள்ளித் தட்டில் வைத்தபடி
வெத்திலை கொள் நீ என்றுரைத்தான்
வெத்திலை என்றால் பிரியம்தான்
விரும்பி உண்ணும் பண்டம்தான்
செத்த பிறப்பே! உந்தனுக்கு
சிவன்முன் கூட அது நினைப்பா
கத்தும் குரலில் கவிச் சுவையீர்
காயும் சொற்கள் கேட்கிறது
மெத்தப்பகைக்க வேண்டாம்காண்
மெய் நண்பர்கள் கூட்டு இது
கையில் பிடித்த திரிசூலம்
கண்ணைப்பறிக்க ஒளி சிந்த
தையில் சிலிர்த்த தாமரைபோல்
தண்மதிவதனம் சோதிதர
மையில் தோய்ந்த விழியழகி
மாதர்திலகம் அன்பொழுக
ஐய வாரும் என்றழைத்து
அருகில் இருந்து உபசரித்தார்
புத்தன் அல்லா ஜேசு எனப்
பொலிந்த புனிதர் வரிசையுற
மொத்தத் தவத்தின் முழுவடிவாய்
மோகித்திருந்த காட்சி என்னே !
சித்தம் நிறைந்த சீர் அடியார்
சிந்தை கவர வீற்றிருந்தார்
நித்தம் தொழுத நேயமதால்
நீண்ட நேரம் நினைத்திருந்தேன்
மொத்த மதமும் முழு இறையும்
முடிவில் கூடும் இடமிதுவா ?
குத்தி முறிந்து கோபித்துக்
குதறிக் கடித்து வெறிகாட்டிச்
செத்து மடிந்தோம் செகம் எல்லாம்
செருக்குற்றலைந்தோம் மதப்போரால்
வித்தை வேண்டாம் வியனுலகீர்
விரிமதம் எல்லாம் ஓரிடமே
சுந்தரர் இருந்தார் அருகினிலே
சுற்றுமுற்றும் நான் பார்த்தேன்
நந்திதேவர் நகை செய்தார்
நாட்டுப் புதினம் எப்படியோ ?
வெந்த புண்ணில் வேல் பாச்ச
வேறு யாரோ குரல் கொடுத்தார்
அந்தரம் தனை அடைந்த பின்னும்
அரசியல் தானா சலிப்புற்றேன்
மாடுவெட்டுதல் குற்றமாமென
மகிந்த சொன்னது உன்மையோவென
நாடுபற்றிய நலங்கள் கேட்பதாய்
நரை ததும்பிய முனிவர் வேண்டினார்
ஆடு மாடொடு யானை சிங்கமும்
அவற்றை ஒத்ததாய் மனிதயாதியும்
கூடுகொள்கையில் கருணை காண்பதும்
குறுக்கு வழியிலே கொலையில் மாழ்வதும்
எங்கள் நாட்டிலே இயல்பு வாழ்க்கையாம்
இதனில் இல்லை ஓர் வியப்பு என்பதாய்
தங்கும் வேதனை தகித்து வாட்டிட
தமிழனாக நான் பதிலை நீட்டினேன்
சிங்களத்தவன் தருமம் என்பது
சிரிப்பை அல்லவா உண்டு பண்ணுது
மங்கி மறைந்துமே மரித்து ஓரினம்
மாண்டுபோகலாம் மாடுசாவதா ???
இன்று தொட்டினி மாடு தப்பலாம்
இந்த நாட்டிலே மனிதமாடுகள்
தொன்று தொட்டுமே தொலைவதேனென
தோற்ற ஓர் இனப் பிரஜையாய் மனம்
கன்ற வந்துமே கனத்த ஓர் வினா
கண்ட எல்லையில் சாதல் செய்தது
வென்று வேதனை வெக்கி மாண்டிட
வெந்தெழுந்தது வெறித்த மூச்சுமே
இருவதென்றொரு தீர்வு வந்ததே
இனிய மாறுதல் எதனைத் தந்தது ?
ஒருவர் கேள்வி பின் ஒருவராகவே
உலக சூழ்நிலை அறியப் பார்த்தனர்
வருதுபார் எனத் தீர்வு வருவதும்
வந்தபோல் அது வெந்து போவதும்
பருவமாரிபோல் தொடரு நீள்கதை
பாவியேன் அதைப் பகர வேண்டுமோ ?
சட்டமின்றியே கொன்று தீர்த்தவர்
சண்டையின்றியே சதிகள் செய்பவர்
திட்டமிட்டொரு தீர்வு தேடினால்
தீந்து போகுமே நாட்டு நீதிகள்
.வட்டமிட்டுநோய் வாட்டு வேளையில்
வாக்கு வேட்டையில் தீர்ப்பு நாட்டியே
கட்டவிழ்க்கிறார் காட்டு ஆட்சியை
கண்டு கொள்ள ஓர் தெய்வம் இல்லையோ ?
மொட்டவிழ்ந்தபோல் முறுவல் பூத்துமே
மொய்த்தவத்தவர் மகிழ்ந்தழைத்தெனை
கட்டவிழ்க்கலாம் காட்டு ஆட்சியை
கருணை இன்றியே காவல் செய்யவாம்
சட்டமென்றொரு சாவின் ஓலையை
சதிகள் கூட்டியே சரியதாக்கலாம்
விட்டு நீக்கு உன் விஷனம் யாவையும்
விரைவில் மாறிடும் தமிழர் சோகமே!
என்ற தேன் குரல் என் செவிப்புக
ஏக்கம் நீங்கியே மகிழ்வு கொண்டனன்
சண்டமாருதம் கண்ட பூமி போல்
சாந்த கயிலையும் சர்ச்சை கொண்டது
அண்டநாயகர் இலங்கை ஏகினார்
ஆறு வான் கடல் அனைத்தும் நின்றது
கண்ட தூக்கமும் கலைந்துபோக நான்
கனவை விட்டுமே விழிதிறந்தனன்
Comments